ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்சி பொறுப்பிலிருந்தும் பொற்கொடி விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பகுஜன் சமாஜ் கட்சி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக, அதன் அடையாளமாக விளங்கி கொண்டிருந்தவர் ஆம்ஸ்ட்ராங். தலித் மக்களின் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த வருடம் மிக கோரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏராளமானோர் அடுத்தடுத்து கைதானார்கள். எனினும், இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் இறந்ததுமே, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டார்.. இதையடுத்து, தன்னை பொற்கோடி ஆம்ஸ்ட்ராங் என்ற பெயரை பயன்படுத்தாமல், திருமதி ஆம்ஸ்ட்ராங் என்று பயன்படுத்துங்கள் என்று ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆம்ஸ்ட்ராங்கின் பெயரை நினைவூட்டவே இப்படியான வேண்டுகோளை அவர் விடுத்திருந்தார்.
கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மேலிடப் பிரதிநிதிகளை, பொற்கொடி தலைமையிலான 500க்கும் மேற்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் ஒன்று திரண்டு நேரில் சந்தித்திருந்தனர்.. அப்போது, மாநில தலைவராக உள்ள ஆனந்தன், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் புகார் தெரிவித்திருந்தார். மாநில தலைவர் மீது புகார் அதுமட்டுமல்ல, ஆம்ஸ்ட்ராங் நியமித்த பொறுப்பாளர்கள் பாடுபட்டு கட்சியை வளர்த்திருக்கின்றனர். அப்படியிருக்கும்போது, அவ்வளவு எளிதாக பொறுப்புகளை விட்டுத்தருவோமா? மாநில தலைவர் இதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று தன் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்திருந்தார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.
இதற்கு பிறகு, பொற்கொடியை, தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள், மேலிடப் பிரதிநிதிகளிடம் மனு வழங்கி கோஷமிட்டிருந்தனர்.. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பொற்கொடி இனி கட்சி பணிகளில் ஈடுபட மாட்டார் என பகுஜன் சமாஜ் அறிவித்துள்ளது.. அதுமட்டுமல்ல, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தன்னுடைய குடும்பத்தை மட்டுமே இனி கவனித்து கொள்வார், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையில் மட்டுமே பொற்கொடி இனிமேல் கவனத்தை செலுத்துவார் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, பொற்கொடி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கட்சிக்குள் உட்கட்சி பூசல் தலைதூக்கி வரும் நிலையில், பொற்கொடி குறித்த இந்த அறிவிப்பு, எத்தகைய மாற்றத்தை கட்சிக்குள் ஏற்படுத்தும் என தெரியவில்லை.