சூழ்ச்சி ஆட்டம் தான் கூட்டணி நாடகமும், அண்ணாமலை பதவி நீக்கமும்: மனோ தங்கராஜ்!

அதிமுகவை தன்வசம் வைத்துக்கொண்டு ஆர்எஸ்எஸ் – பாஜக இணைந்து நடத்தியிருக்கும் சூழ்ச்சி ஆட்டம் தான் தற்போதைய கூட்டணி நாடகமும், அண்ணாமலை பதவி நீக்கமும் என திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அதிமுக – பாஜக கூட்டணி முறிந்த நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பாஜக – அதிமுக இணைந்து போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக – அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தினார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமித் ஷா, கூட்டணியை உறுதி செய்து அறிவித்தார். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பாஜக மாநிலத் தலைவரும் மாற்றப்பட்டார். அண்ணாமலைக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக உடன் கூட்டணி என்பதற்காகவே அண்ணாமலை பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இதெல்லாம் பாஜகவின் சூழ்ச்சி நாடகம் தான் என திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழாது என்பது பாஜகவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே தெரியும்! அதிமுகவிற்கு ஆட்சியை பிடித்து கொடுத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவது பாஜகவின் நோக்கமல்ல. அதிமுகவை தன்வசம் வைத்துக் கொண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற ஆர்எஸ்எஸ் – பாஜக இணைந்து நடத்தியிருக்கும் சூழ்ச்சி ஆட்டம் தான் தற்போதைய கூட்டணி நாடகமும், மாநிலத் தலைவர் மாற்ற நாடகமும்.

மாநிலங்களவையில் தங்களது ஆதரவை பெருக்குவது தான் பாஜகவின் மறைமுக திட்டம். அதிகாரத்தை கைப்பற்ற எப்பேர்ப்பட்ட கீழ்த்தர செயலையும் செய்யலாம் என்ற பாசிச கோட்பாடின் பிரதிபலிப்பே அண்ணாமலை பதவி பறிப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.