டெல்லியில் 3 நாட்கள் தங்கினால் உங்களுக்கு ஏதாவது தொற்று வந்துவிடும்: நிதின் கட்காரி!

டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இருப்பதாக நிதின் கட்காரி கூறினார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது:-

டெல்லியில் நிலவும் கடுமையான மாசுபாடு அளவீடுகளை குறிப்பிட்ட அவர், டெல்லியில் தங்குவது சவாலான காரியம் என்றும், வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்து விடும் என்றும் சொன்னார். “3 நாட்கள் அங்கு தங்கினீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு ஏதாவது தொற்று வந்துவிடும்.” என்று கூட்டத்தினரைப் பார்த்து அவர் கூறினார்.

மாசுபாட்டில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இருப்பதாகவும், இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு நிலையை அவசரமாக கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாசுபாட்டை தடுப்பதற்கான தீர்வாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டை அவர் அவசியம் என குறிப்பிட்டார். மேலும், “மாசுபாட்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடுகளே காரணம். நாங்கள் கிட்டத்தட்ட ரூ. 22 லட்சம் கோடி மதிப்புக்கு புதை படிவ எரிபொருளை இறக்குமதி செய்கிறோம். இதற்கு பதிலாக மாற்று எரிபொருளை நான் ஆதரிக்கிறேன். புதை படிவ எரிபொருள் இறக்குமதியை குறைத்து, பசுமை எரிபொருள் பயன்பாட்டை அதிகரித்து விவசாயிகளின் பைகளில் ரூ.12 லட்சம் கோடி வரை சேமிக்க விரும்புகிறேன்” என்றார்.

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் தயாரித்த காற்று தர குறியீட்டு அறிக்கையை மேற்கோள் காட்டி, மேற்கண்ட எச்சரிக்கை விஷயங்களை அவர் குறிப்பிட்டார்.