கூலி உயர்வு பிரச்சினைக்கு மாநில அரசு தீர்வு காண வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடைபெற்று வரும் விசைத்தறியாளர்கள் போராட்டத்தை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 12 விசைத்தறியாளர்கள் சோமனூரில் தொடர் உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளனர்.
கோவை, திருப்பூரில் விசைத்தறி தொழில் மூலம் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 2022-ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தக்கூலியில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும், புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவைகளுக்காக கடந்த 19-ம் தேதி முதல் விசைத்தறியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.1000-ம் கோடிக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், கடையடைப்பு போராட்டம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் நிகழ்ந்தது. உண்ணாவிரத போராட்டத்தில் குடும்பசகிதமாக சுமார் 3 ஆயிரம் பங்கேற்றனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து இரவு முதல் சோமனூர் சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன், கண்ணம்பாளையம் தலைவர் வேலுச்சாமி தலைமையில் விசைத்தறியாளர்கள் 12 பேர் அரசின் கவனத்தை ஈர்க்க, சோமனூரில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். இரவு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. விசைத்தறியாளர்கள் பலரும் இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத திடலுக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். சோமனூர் அரசு மருத்துவர்கள், 2 முறை உண்ணாவிரதத்தில் இருப்பவர்களின் உடல்நிலையை வந்து பரிசோதித்துவிட்டு சென்றனர்.
இது தொடர்பாக திருப்பூர்- கோவை விசைத்தறியாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பின் பூபதி கூறும்போது, “அரசு பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால் போதிய முன்னேற்றம் இல்லை. ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசி ஊதியத்தில் சட்டரீதியான பாதுகாப்பை வழங்க வேண்டும். தற்போது 12 விசைத்தறியாளர்கள் தொடர் உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளதால், அரசு பேச்சுவார்த்தையில் முழு வேகத்தை எட்டி முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவை நடந்து வரும் நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது இந்த விவகாரம் என்பது குறிப்பிடத்தக்கது.