இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும்: அமெரிக்க தூதர்!

இலங்கையில் அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று, அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பிச்சென்றுவிட்டார். போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் இலங்கையுடன் அமெரிக்கா துணை நிற்பதாக அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இலங்கையில் நடந்து வரும் அரசியல் முன்னேற்றங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கையின் வரலாற்றில் பலவீனமான இந்த தருணத்தில் அனைத்து தரப்பினரும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இலங்கையில் அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். இலங்கையில் அரசியலமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசு விரைந்து செயல்பட்டு கடன் நெருக்கடிக்கு தீர்வு காண்பதுடன், நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நெருக்கடியான நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ், இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை கேட்டுக்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் இலங்கை மக்களின் துயரில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன். ஏழைகளின் அழுகுரலை புறக்கணிக்க வேண்டாம் என்று இலங்கை பிஷப்புகளுடன் இணைந்து ஆட்சியாளர்களை மீண்டும் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் சமையல் எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வந்தது. கடந்த சில மாதங்களாகவே மக்கள் கியாஸ் சிலிண்டர்களுக்காக போராடி வந்தனர். சாலை மறியலும் செய்தனர். இதில் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் அங்கு நேற்று 3,740 டன் சமையல் கியாசுடன் கூடிய கப்பல் கெரவலப்பிட்டியா துறைமுகம் சென்று இறங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து சமையல் கியாஸ் வினியோகத்தை உடனடியாக தொடங்கி விட வேண்டும் என்று மாயமான அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதை அவரது அலுவலகம் தெரிவித்தது. இதனால் அங்கு கியாஸ் வினியோகம் எந்த நேரத்திலும் தொடங்கி விடும் என தகவல்கள் கூறுகின்றன.