முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை எதும் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதல்வர் மருந்தகத்தில் 206 வகையான ஜெனரிக் மருந்து விற்பனைக்கு வந்துள்ளது. மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக மருந்துகள் கொள்முதல் செய்து தரப்படுகிறது. முதல்வர் மருத்தகத்தில் 75 % மருந்துகள் விலை குறைவாகதான் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது வெறும் 206 வகையான ஜெனரிக் மருந்து மட்டுமே விற்பனை செய்யப்படுதால் அது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. மேலும் இதில் மற்ற மருந்துகளை விற்பனை செய்ய கூட்டுறவு துறையிடம் பேசி வருகிறோம். எனவே, முதல்வர் மருத்தகத்தில் போதுமான அளவுகள் மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
ஆறு மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென்று கோரிக்கை முதல்வர் சார்பாக தொடர்ந்து வைத்து வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவைச் சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறோம். வாய்ப்பு வழங்கும்பட்சத்தில் நிச்சயம் தமிழ்நாட்டில் கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.