ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் உடன் தற்போதிய பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு தொடர்பு இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி குற்றம்சாட்டி உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) மாநில தலைவர் பி. ஆனந்தனுக்கு எதிராக, முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தன் தன்னை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியது தொடர்பாகவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரது செயல்பாடுகள் குறித்தும் பொற்கொடி தனது நேர்காணலில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
பொற்கொடி தனது பேட்டியில், “ஆனந்தன் ஆரம்பத்திலிருந்தே மாநில பொறுப்பாளர்களை எந்தவித காரணமும் கூறாமல் நீக்கி வந்தார். அவரது தவறான செயல்களை கேள்வி கேட்டபோது, ‘அண்ணி, உங்களுக்கு எதுவும் தெரியாது, வீட்டில் சைலண்டாக இருங்கள்’ என்று கூறினார். கட்சியில் எந்த விஷயத்திலும் எனக்கு ஆதரவாக அவர் இருந்ததில்லை,” என குற்றம்சாட்டினார். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆனந்தன் எந்தவொரு முன்னேற்றமும் செய்யவில்லை என்றும், வழக்கை முன்னெடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
கட்சி பொறுப்பில் இருந்து தன்னை நீக்கியதாக வெளியான அறிக்கை குறித்து பொற்கொடி கூறுகையில், “பிஎஸ்பி கட்சி எனது கணவர் ஆம்ஸ்ட்ராங் 17 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி. ஆனந்தனை நான் தான் மேலிடத்துக்கு பரிந்துரை செய்தேன். ஆனால், அவருக்கு என்னை நீக்கும் உரிமையே இல்லை. தேசிய தலைமைக்கு தெரியாமல் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்,” என்று மறுத்தார். மேலும், “ஒரு பெண்ணை ‘குடும்பத்தை பார்த்துக்கொள்’ என்று கூறுவது கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது,” என விமர்சித்தார்.
“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மொட்டை கிருஷ்ணன் மற்றும் சம்போ செந்தில் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே வழக்கின் முழு உண்மை வெளிவரும். நல்லவரை போல் நடித்து அவரது முதுகில் குத்தியது துரோகம். ஆனந்தன் இந்த வழக்கில் எதையும் செய்யவில்லை. அண்ணனின் வழக்கை நடத்துவேன் என்று சொல்லிதான் அவர் பதவிக்கே வந்தார். இதுவரை இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை படித்து சொல்லவே இல்லை. ஆனந்திற்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது” என்று கூறினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பொற்கொடி கூறுகையில், “வழக்கை முதலில் பழிவாங்கல் கொலையாக முடித்துவிட முயற்சித்தனர். நாங்கள் அழுத்தம் கொடுத்த பிறகு 28 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், ஜெயிலில் உள்ள குற்றவாளிகள் எனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ஆனந்தனிடம் புகார் அளித்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நானே கமிஷனரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வைத்தேன்,” என்றார்.
கட்சியின் பல நிர்வாகிகள் தனக்கு ஆதரவாக இருப்பதாக குறிப்பிட்ட பொற்கொடி, “தேசிய தலைமையின் உத்தரவின் பேரில் அடுத்த கூட்டத்தில் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்கு 25 வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்தேன். இப்போதைக்கு சிபிஐ விசாரணை வேண்டாம் என்று ஆனந்த் கூறினார்” என்று தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு விவகாரத்தில் ஆனந்த் மாற்றி, மாற்றி பேசுகிறார் என்றும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் குற்றம்சாட்டினார்.
ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு குறித்து உருக்கமாக பேசிய பொற்கொடி, “எனது கணவர் பலருக்கு உதவி செய்தவர். அவரைப் பற்றி தவறான செய்திகள் பரவுவது மனதை புண்படுத்துகிறது. எனது குழந்தைக்கு அவரது இழப்பு பெரும் வலியை தருகிறது. ஆனால், ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்கள், வழக்கறிஞர்கள், அதிகாரிகள் என பலரும் எனக்கு பக்கபலமாக இருக்கின்றனர்,” என்று கூறினார்.