மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வருத்தம் தெரிவித்ததையடுத்து, உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்தது. தனது ராஜினாமா அறிவிப்பையும் திரும்பப் பெறுவதாக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, முதன்மைச் செயலாளர் துரை வைகோ இடையேயான பனிப்போர் அண்மையில் நடைபெற்ற மதிமுக தொழிலாளரணி கூட்டத்தில் வெளிப்பட்டது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் வகையில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்கும் முன் முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, “உட்கட்சி விவகாரத்தை வீடியோ எடுத்து வெளியிட்டு, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது அவர் தான். கட்சிக்கு அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவிடக் கூடாது” என்றார். இதேபோல், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “நான் வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அவர் முகம் பதித்த மோதிரம் அணிந்திருப்பதே அடையாளம்” என கூறியிருந்தார்.
இதற்கிடையே, நேற்று திட்டமிட்டபடி கூட்டம் தொடங்கியது. பிறகு செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:-
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்த சூழலில், இருவருமே மனம்விட்டு பேசினர். கட்சிக்கும் பொதுச்செயலாளருக்கும், முதன்மைச் செயலாளருக்கும் பக்கபலமாக செயல்படுவேன் என மல்லை சத்யா சொன்னார். இதை ஏற்றுக் விலகல் முடிவை திரும்பப் பெறுவதாகவும் துரை வைகோ அறிவித்தார். இருவரும் கட்டித் தழுவி கரம் குலுக்கி, இணைந்து பணியாற்றுவோம் என நிர்வாக குழுவுக்கு சமிக்கையாக தெரிவித்தனர்.
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏப்.26-ல் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை சென்னையில் நான், மல்லை சத்யா உள்ளிட்டோரும், மதுரையில் துரை வைகோ, பூமிநாதன் எம்எல்ஏ, கோவையில் அவைத் தலைவர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்திலதிபன் ஆகியோர் தலைமையேற்று நடத்த இருக்கிறோம். மதிமுக பொதுக்குழு ஜூன் மாதம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
துரை வைகோ கூறும்போது, “கட்சியில் கருத்து வேறுபாடு தவிர்க்க முடியாதது. மல்லை சத்யா வருத்தம் தெரிவித்துவிட்டார். அவரளித்த வாக்குறுதி அடிப்படையில் மீண்டும் பொறுப்பில் தொடர்வேன். அவரது அரசியல் வாழ்வுக்கு நானும் உறுதுணையாக இருப்பேன்” என்றார்.
இதேபோல் மல்லை சத்யா கூறும்போது, “என்னுடைய நடவடிக்கைகள் துரை வைகோவை காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். அவர் தொடர்ந்து கட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று சொன்னேன்” என்றார்.