கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் இன்று இரங்கல் தெரிவிக்கிறது. கத்தோலிக்க திருச்சபையைத் தாண்டி, அவர் தனது பணிவு மற்றும் ஏழைகள் மீதான தூய அன்பின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தினார். இந்த ஆழ்ந்த இழப்பை உணரும் அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. போப் பிரான்சிஸின் மரபு நம்மை நீதியான, அமைதியான மற்றும் இரக்கமுள்ள உலகத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்தும். அவரது ஆன்மா ஆறுதல் காணட்டும்” என தெரிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸ் காலமானதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “போப் பிரான்சிஸ், சாந்தியடையட்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் போப், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன் தனித்தனி சந்தர்ப்பங்களில் சந்தித்த புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தியா வந்துள்ள ஜே.டி. வான்ஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “போப் பிரான்சிஸ் காலமான செய்தியை இப்போதுதான் அறிந்தேன். உலகம் முழுவதும் அவரை நேசித்த கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு என் இதயம் இரங்குகிறது. நேற்று அவரைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன், இருப்பினும் அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் கோவிட் தொற்றின் ஆரம்ப நாட்களில் அவர் ஆற்றிய மறையுரைக்காக நான் எப்போதும் அவரை நினைவில் கொள்வேன். அது மிகவும் அழகாக இருந்தது. கடவுள் அவரது ஆன்மாவை அமைதிப்படுத்தட்டும்” என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆழ்ந்த நம்பிக்கையும் எல்லையற்ற இரக்கமும் கொண்ட அவர், ஏழைகளை மேம்படுத்துவதற்கும், பிரச்சினை நிறைந்த உலகில் அமைதிக்காக அழைப்பு விடுப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். மத்திய கிழக்கில் அமைதிக்காகவும், (காசாவில்) பிணைக் கைதிகள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காகவும் அவர் செய்த பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நாம் வாழும் காலத்தில் உலகின் மிக முக்கிய பிரச்சினைகளை அங்கீகரித்து அவற்றிற்கு கவனம் செலுத்திய ஒரு தலைவருக்கு உலகளாவிய கத்தோலிக்க சமூகம் அஞ்சலி செலுத்துகிறது. நிதானமான வாழ்க்கை முறை, சேவை மற்றும் இரக்கச் செயல்கள் மூலம் போப் பிரான்சிஸ், கத்தோலிக்கர்கள் மற்றும் கத்தோலிக்கரல்லாதவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். நாங்கள் அவரை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். போப் ஆண்டவர் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது, கத்தோலிக்க சமூகத்துக்கு எனது இரங்கல். உலகெங்கிலுமுள்ள மக்களால் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார். ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து போப் பிரான்சிஸ் சேவையாற்றினார் என புகழஞ்சலி செலுத்தினார்.
இந்திய ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “போப் பிரான்சிஸ் ஓர் ஆழ்ந்த நம்பிக்கையாளராகவும், மாறுபட்ட பாரம்பரியவாதியாகவும் இருந்தார்! அவர் சீர்திருத்தத்தை ஆதரிப்பவராகவும், மதங்களுக்கு இடையேயான உரையாடலை ஆதரிப்பவராகவும் இருந்தார். சுற்றுச்சூழல் மீதான அவரது அக்கறையும், மனித கடத்தலுக்கு எதிரான அவரது முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை. சிறந்த புரிதலுக்கான அவரது அழைப்பு அவரது ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். புதுடெல்லி மற்றும் வாஷிங்டன், டி.சி.யில் நடைபெற்ற உலக கலாச்சார விழாவில் வாழும் கலைக்கான அன்பான செய்தியுடன் அவர் தனது தூதரை அனுப்பியிருந்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘போப் பிரான்சிஸ் மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக’ குறிப்பிட்டுள்ளார். கத்தோலிக்க திருச்சபையை அக்கறையுடனும் நன்மதிப்புடன் கூடிய முற்போக்கு பாதையில் வழிநடத்தியவர் போப் என்றும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
பிறர் துன்பத்தை தம் துன்பம் போல் எண்ணி இரக்க குணத்துடன் செயல்பட்டவர் என்றும், முற்போக்கு குரலாக ஒலித்தவர் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
ஏழை மக்களுக்கான அவரது அர்ப்பணிப்பு உணர்வு, ஒடுக்கப்பட்டோருக்கு அவர் அளித்த ஆதரவுக்கரம், ‘நீதி, அமைதி, மதங்களுக்கு’ இடையிலான நல்லிணக்கத்திற்கான பேச்சுவார்த்தை ஆகியவை கத்தோலிக்க திருச்சபையை கடந்தும் உலகெங்கிலும் அவருக்கு மரியாதையை பெற்றுத் தந்தது. செயலில் கருணை மற்றும் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை ஆகியவற்றை கடைப்பிடிக்க பெருவழியை நம்மிடையே அவர் விட்டுச் சென்றுள்ளார் என்று பொருள்பட தமது இரங்கல் செய்தியில் போப் பிரான்சிஸுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் முதல்வர்.
நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:
கத்தோலிக்கத் திருச்சபைகளின் தலைவர், உலகெங்கும் வாழும் கிறித்துவப் பெருமக்களின் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குமுரிய இறைநேசர் ‘போப் ஆண்டவர் பிரான்சிஸ்’ அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
“ஆறுகள் தங்கள் தண்ணீரைத் தாங்களே குடிப்பதில்லை; மரங்கள் தங்கள் பழங்களைத் தாங்களே உண்பதில்லை; சூரியன் தனக்காகப் பிரகாசிப்பதில்லை; பூக்கள் தங்களுக்காக மட்டுமே மணம் பரப்புவதில்லை; மற்றவர்களுக்காக வாழ்வது என்பது இயற்கையின் விதி!” என்ற உலகப் பேரன்புக் கோட்பாட்டினை மொழிந்து, நாம் வாழும் பூமியையும் நம்முடன் வாழும் உயிர்களையும் நேசித்து அவற்றின் மீது அன்பும், பரிவும் கொண்டு வாழ்வதே உண்மையான இறைபக்தி என்பதை தம் புனித பெருவாழ்வினால் உலகிற்கு உணர்த்திய பெருமகன்!
இந்த உலகத்தை நம் மூதாதைகளிடமிருந்து பரம்பரைச் சொத்தாகப் பெற்றோம்; அதே நேரம், நமக்குப் பின்வரும் தலைமுறையினரிடமிருந்து கடனாகவும் பெற்றுள்ளோம்! ஆகவே, அதை நாம் பாதுகாப்பாக அவர்களுக்குக் கையளிக்க வேண்டும். ஆனால் அந்தக் கடமையை நாம் முற்றிலும் மறந்து, இயற்கையை அளவுக்கதிகமாகச் சுரண்டிவிட்டோமே என மனம் வருந்திய போப் அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தாம் செல்லும் இடங்களில் எல்லாம் பேசியும், எழுதியும் நாம் வாழும் பூமியைப் பாதுகாக்க அரும்பணி ஆற்றிய பெருந்தகை!
போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள கிறித்துவப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
மதம் கடந்து மண்ணையும் மக்களையும் நேசித்த மாமனிதர்,
இயற்கையைப் பாதுகாக்க முனைந்த இறைதொண்டர்,
போற்றுதலுக்குரிய போப் பிரான்சிஸ் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:
உலகெங்கிலும் வாழ்கிற கோடான கோடி கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைவரான போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் இன்று மறைந்தார் என்ற செய்தி மிகப்பெரும் துக்கத்தைத் தருகிறது. 12 ஆண்டுகள் வாட்டிகன் திருச்சபைக்குத் தலைவராக இருந்த போப்பரசர், உலகில் சாதி மதங்களால் எந்த இரத்தக்களறியும் ஏற்படக்கூடாது என்றும், சமாதானம் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அருள்மொழி வழங்கிய போப்பரசரின் மறைவு அனைத்து தரப்பினரையும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. நேற்று ஈஸ்டர் தின கொண்டாட்டத்தில் பங்கேற்று மக்களுக்கெல்லாம் அருள்மொழி தந்து ஆசி வழங்கிவிட்டு இன்று திருச்சபையின் இல்லத்திலேயே மறைந்துவிட்டார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தோம். அவரது முழு வாழ்க்கையும் இறைவனுக்கும், அவரது திருச்சபைக்கும் சேவை செய்வதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டது. முற்போக்கான கருத்துகள் கொண்டவராகவும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு அளிப்பவராகவும் அறியப்பட்டவர். கத்தோலிக்க மதத்தில் பல்வேறு சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் திருச்சபைக்கு உள்ளேயும், வெளியேயும் கொண்டு வந்தவர். பத்தாண்டுகளுக்கும் மேலாக தனது போப் ஆண்டவர் பதவியில் இருந்த காலத்தில் மதங்களுகிடையேயான உரையாடலை ஆதரித்ததோடு, மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்டவர். மதரீதியான கசப்புகளையும், வெறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள மறுத்தவர். அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் உரிமைகளுக்காக வாதாடியவர். அவரது மறைவினால் வருத்தத்துக்கு உள்ளாகி இருக்கும் கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் அவர்கள் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த போப் பிரான்சிஸ் தென் அமெரிக்காவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ஆண்டவர் என்ற பெருமையுடையவர். உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட போப் பிரான்சிஸ், தமது 12 ஆண்டு பதவிக்காலத்தில் உலகில் அமைதியை ஏற்படுத்த ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டவர். ஈஸ்டர் திருநாளையொட்டி, நேற்று செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் மக்களுக்கு ஆசி வழங்கும் போதும் உலகில் போர்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்; அமைதி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று தான் வேண்டினார். போப் பிரான்சிஸ் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாகும். போப் பிரான்சிஸ் அவர்களை இழந்து வாடும் கத்தோலிக்கர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் சோகத்தின் நானும் பங்கு கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்திக்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
உலக மக்களிடம் எல்லையில்லாத அன்பும், கருணையும் காட்டிய கத்தோலிக்க மக்களின் சமயத் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார் என்பதை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குருவாக 12 ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்றுக் கொண்ட போப் பிரான்சிஸ், கிறித்தவ மக்களையும் கடந்து உலகில் அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்ட மனிதராக திகழ்ந்தார். சமயத்தைக் கடந்து நல்லிணக்கம், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்காகவும் பாடுபட்டவர். உலகில் நலிவடைந்த மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்த அவரது மறைவு உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். கிறித்தவ மக்களின் சோகத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.