ஜப்பான் சென்றுள்ள திமுக எம்.பி. கனிமொழி, நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியனை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
நெப்போலியனின் மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்ஷயாவை சந்தித்து திருமண வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி, கலைஞர் கருணாநிதி குறித்த நினைவுகளை நெப்போலியன் உடன் பகிர்ந்துகொண்டார்.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெப்போலியன் பதிவிட்டுள்ளதாவது:-
நான் பெரிதும் மதிக்கக்கூடிய எனது அரசியல் குரு, கலைஞரின் மகள் கனிமொழி, ஒரு வாரகாலம் ஜப்பானுக்கு வருகை தந்துள்ளார்! நான்கு நாள்களுக்கு முன்பாக ஜப்பானின் இந்திய தூதுவர் சிபி ஜார்ஜ் கொடுத்த விருந்தில் , தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் ரேவந்த் ரெட்டி, கனிமொழி ஆகியோருடன் நானும், கலந்து கொண்டேன்.
இன்று ஏப்ரல் 21 திங்கள் கிழமை, ஜப்பானில் நாங்கள் வசிக்கும் எங்கள் இல்லத்திற்கு கனிமொழி வருகை தந்து தனுஷையும் அக்ஷயாவையும் வாழ்த்தினார்கள். சிலமணிநேரம் தலைவர் கலைஞரைப் பற்றி பழைய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டோம். மகிழ்வோடும், மனநிறைவோடும் அவர்களை வழி அனுப்பி வைத்தோம். இன்று இரவு இந்தியா திரும்புகிறார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.