மிக நவீனமான உயர்தர போலி ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய உள்விவகாரத் துறை எச்சரித்துள்ளது.
அச்சடிக்கப்பட்டிருக்கும் விதம், போலி ரூபாய் நோட்டின் தரம் என அனைத்தும், அசல் ரூபாய் நோட்டுடன் மிக அதிக விகிதத்தில் ஒத்துப்போவதாகவும், போலி ரூபாய் நோட்டு எது என வித்தியாசம் கண்டுபிடிப்பது சவாலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.500 அசல் நோட்டுகளைப் போன்றே, போலி நோட்டுகளைக் கண்டறிவதற்கான அனைத்து நுட்பங்களையும், போலி ரூ.500 நோட்டுகள் கொண்டிருப்பதாகவும், ஆனால், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்ற ஆங்கில வார்த்தையில் மட்டும் ரிசர்வ் என்ற வார்த்தையில் இ என்ற ஸ்பெல்லிங் பதிலாக ஏ என்ற வார்த்தை அச்சிடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த எழுத்துப் பிழைத் தவிர வேறு எந்த வகையிலும் போலி நோட்டுகளைக் கண்டுபிடிக்க முடியாத வகையில், புதிய நோட்டுகள் அச்சிடப்பட்டிருப்பதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, நிதித்துறை, வங்கிகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கையாளும் நிறுவனங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ஏற்கனவே இதுபோன்ற நோட்டுகள் ஏராளமானவை புழக்கத்தில் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிதியமைப்புகளுக்கு போலி ரூபாய் நோட்டுகளின் புகைப்படத்துடன் எச்சரிக்கைத் தகவல் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்களும் சந்தேகத்துக்கு உரிய போலி ரூபாய் நோட்டுகளைப் பார்த்தால் உடனடியாக அது குறித்து எச்சரிக்கை செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதுவரை, எந்த மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருக்கலாம் என்பதை புலனாய்வு அமைப்புகளால் கண்டறிய முடியாது என்றும், இதுவரை வங்கி உள்ளிட்ட நிதியமைப்புகளால் கண்டுபிடிக்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளை விடவும் மிக அதிக எண்ணிக்கையிலான நோட்டுகள் புழக்கத்தில் இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.