ராகுல் காந்தி ஒரு தேசத்துரோகி என்று பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா குற்றம் சாட்டி உள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு பாஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “இந்திய தேர்தல் ஆணையம் சமரச அமைப்பாகிவிட்டது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மோசடி நடைபெற்றது. அதற்கு தேர்தல் ஆணையம் துணைபோனது” என்று குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா வதேரா வெற்றி பெற்றிருக்கிறார். இதற்காக தேர்தல் ஆணையத்துடன் ராகுல் சமரசம் செய்தாரா? கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 240 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.
அயோத்தி மக்களவைத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது. இதை காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடியது. அப்போது தேர்தல் ஆணையம் குறித்து காங்கிரஸ் எதுவுமே கூறவில்லை. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டு வருகிறது. பாரதத்தின் ஜனநாயகம் தழைத்தோங்கி வருகிறது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ராகுல் காந்தி ஏற்கெனவே குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு தேர்தல் ஆணையம் தகுந்த விளக்கம் அளித்துவிட்டது. தற்போது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இந்தியாவை இழிவுபடுத்தி வருகிறார். இது அவருக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது.
ராகுல் காந்தி ஒரு தேசத்துரோகி, அவர் கடுமையான விரக்தியில் உள்ளார். இதன்காரணமாகவே அவர் பாரதத்தை தொடர்ச்சியாக இழிவுபடுத்தி வருகிறார். அவர் ஜாமீனில் வெளியே இருக்கிறார் என்பதை மறந்துவிட வேண்டாம். கடந்த 2018-ம் ஆண்டில் ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் ரூ.50,000 ஜாமீனில் விடுதலையாகினர். இதை காங்கிரஸார் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடினர். பாஜகவை பொறுத்தவரை இது ஊழலின் கொண்டாட்டம் ஆகும். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதை ஒட்டுமொத்த நாடும் அறியும். இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் ஷெசாத் பூனாவாலா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
தேர்தலில் வெற்றி பெற்றால் காங்கிரஸ் எந்த கருத்தையும் வெளியிடாது. ஒருவேளை தோல்வி அடைந்தால் தேர்தல் ஆணையத்தின் மீது அந்த கட்சி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தும். இதேபோல ஏதாவது ஒரு வழக்கில் வெற்றி பெற்றால் காங்கிரஸ் எந்த கருத்தையும் வெளியிடாது. ஒருவேளை வழக்கில் தோல்வி அடைந்தால் நீதிமன்றத்தின் மீதே அந்த கட்சி குற்றச்சாட்டுகளை சுமத்தும். இது காங்கிரஸின் வாடிக்கை மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு பாரதத்தை இழிவுபடுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதற்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள். இவ்வாறு ஷெசாத் பூனாவாலா கூறியுள்ளார்.