எலான் மஸ்கிற்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு!

டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்த எலான் மஸ்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மொத்த டுவிட்டர் கணக்குகளில் 5 சதவீதம் மட்டுமே போலி கணக்குகள் என டுவிட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், போலி கணக்குகள் விவரம் குறித்து தெரிவிக்க உரிய கால அவகாசம் அளித்தும், தராததால், ஒப்பந்தத்தை கைவிடுதாக வெள்ளியன்று மஸ்க் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டுவிட்டர் நிறுவனம், ‘எலான் மஸ்க்குடன் மேற்கொள்ளப்பட்ட இணைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த சட்டப்பூர்வ நடவடிக்கையை தொடர திட்டமிட்டுள்ளோம். அதில் வெற்றி பெறுவோம்’ என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் நீதிமன்ற மிரட்டல் குறித்து எலான் மஸ்க் டுவிட்டரில் நகைச்சுவையான மீம்ஸ் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில்,

”என்னால் டுவிட்டரை வாங்க முடியாது என்று சொன்னார்கள்..”
”பின்னர் அவர்கள் போலி கணக்கு தகவலை வெளியிட மாட்டார்கள்..”
”இப்போது நீதிமன்றத்தில் வாங்க கட்டாயப்படுத்த விரும்புகிறார்கள்..”
”இப்போது அவர்கள் நீதிமன்றத்தில் போலி கணக்கு தகவலை வெளியிட வேண்டும்..” என ஒவ்வொன்றுக்கும் விதவிதமான போஸ்களில் எலான் மஸ்க் சிரிக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனைக் கண்ட நெட்டிசன் ஒருவர், எலான் மஸ்க் ”டுவிட்டரிலேயே டுவிட்டரை கலாய்ப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.