தமிழகத்தில் உணவு பாதுகாப்பு ஆணையம் மயோனைஸுக்கு தடை!

தமிழகத்தில் பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த தடையானது ஓராண்டு வரை அமலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதியிலிருந்து மயோனைஸ் விற்பனை, சேமித்து வைப்பது, தயார் செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மயோனைஸ் என்பது வறுத்த கறி, பொரித்த சிப்ஸ்கள், பிரென்ச் பிரைஸ் உள்ளிட்டவைகளுக்கு தொட்டு கொள்ள பயன்படுத்தப்படுகிறது. இது வெள்ளை நிறத்தில் ஐஸ்கிரீம் போல் இருக்கும். இது இனிப்பு மற்றும் உப்பு சுவை கலந்தாற் போல் இருக்கும். இவற்றை பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இது போல் பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனைஸில் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்பு ஆணையம் பிறப்பித்துள்ளது.

அதாவது சால்மோனெல்லா டைபிமியூரியம், சால்மோனெல்லா என்டரிடிடிஸ், எஸ்சேரிசியா கோலி, லிஸ்டெரியா மோனோசைட்டோஜீன்ஸ் போன்ற கிருமிகளால் உடல்நலத்திற்கு பல்வேறு வகைகளில் உடல்நலனுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பச்சை முட்டையின் மஞ்சள் கருவை கொண்டு மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. முறையற்ற தயாரிப்பு, சேமிப்பு வசதிகள், நுண்ணுயிரிகளால் ஏற்படும் மாசுபாடு ஆகியவை பொது சுகாதார அபாயத்தை உருவாக்குகின்றன என சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வந்தவர் ரேஷ்மா பேகம். இவருக்கு 33 வயது. இவர் சாலையோர கடை ஒன்றில் மயோனைஸுடன் மோமோஸ் சாப்பிட்டாராம். அவருடன் 50 பேர் இந்த மயோனைஸை சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில்தான் ரேஷ்மா பேகம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அந்த கடையில் சாப்பிட்ட 50 பேரில் 15 பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து கடையை சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் அங்கு மயோனைஸுக்கு தடை விதிக்கப்பட்டது. அது போல் தமிழகத்திலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் இந்த மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.