அப்பாவி இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்: வைகோ!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

காஷ்மீரில் பகல்காம் சுற்றுலா தலத்தில் அப்பாவி இந்தியர்கள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடன் அதிர்ச்சியும், பதற்றமும் ஏற்பட்டது.

நான்கு நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதிகள் தேனிலவு சென்ற இடத்தில் கோரமாக கொல்லப்பட்ட செய்தி கேட்ட மாத்திரத்திலேயே நமக்கு நெஞ்சம் பதறுகிறது. அந்தக் குடும்பத்தினரும், உற்றார் உறவினரும் எவ்வளவு துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகி இருப்பார்கள் என்பதை கற்பனை செய்யவே முடியவில்லை. இந்தத் துயரமான வேளையிலும், துப்பாக்கிச் சூட்டில் தப்பி வந்தவர்களை காஷ்மீர் இஸ்லாமிய இளைஞர்கள் பாதுகாத்து அழைத்துச் சென்றனர் என்ற செய்தி மனதுக்கு ஒரு வகையில் ஆறுதல் அளிக்கிறது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசும், தமிழகமும் பக்க பலமாக துணை நிற்கும் என்று அறிக்கை தந்துள்ளார்.

காஷ்மீர் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு துணையாக நிற்கும் என்ற உணர்வை வெளிப்படுத்தி உள்ளன. இந்தப் படுகொலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.