எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தை புறக்கணித்தார் செங்கோட்டையன்!

அண்ணா திமுக எம்.எல்.ஏக்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்து நிகழ்ச்சியில் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்தாலும் அவரை விட சீனியர்கள் தனி ஆவர்த்தனத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். அண்மைக் காலமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கருத்தை கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தி வருகிறார். மேலும் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் செங்கோட்டையன் சந்தித்தார். சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார் செங்கோட்டையன்.

சட்டசபையில் சில நேரங்களில் அதிமுக தலைமையின் உத்தரவுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார் செங்கோட்டையன். அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தாலும் கூட சட்டசபைக்குள் அமர்ந்து கேள்வி கேட்டு பதில் பெறுகிறார் செங்கோட்டையன். ஆனாலும் செங்கோட்டையன் மீது அதிமுக தலைமை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேஏ செங்கோட்டையன் தொடர்பான கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி நேரடியாக பதில் அளிப்பதும் இல்லை. செங்கோட்டையனும் எடப்பாடி பழனிசாமி என்ற பெயரை உச்சரிப்பதையே தவிர்த்தும் வருகிறார். அதிமுகவில் வைகை செல்வன் உள்ளிட்டோர் செங்கோட்டையனை மிக கடுமையாகவும் விமர்சிக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. இதற்கும் அதிமுகவில் சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அதிமுகவின் செயற்குழு கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார்.

முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் நேற்று இரவு விருந்து அளித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த விருந்து நிகழ்ச்சியில் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.