பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பகல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ளார்.
பகல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூடியது. இதில், காங்கிரஸ் தலைவர் கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்ததுடன், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் ஒரு கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். எவ்வளவு கண்டிக்கப்பட்டாலும் அது குறைவுதான். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். இந்த முக்கியமான பிரச்சினை குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழுவின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன், பகல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பரத் துறையின் தலைவர் பவன்கேரா, “பகல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுமாறு அரசுக்கு காங்கிரஸ் கட்சி கடந்த 22ம் தேதி கோரிக்கை விடுத்தது. அந்தக் கோரிக்கையை ஏற்று, அரசாங்கம் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இந்த விஷயத்தின் தீவிரத்தை பிரதமர் புரிந்துகொண்டு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று நம்புகிறோம். பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான நேரடித் தாக்குதலாகும். இந்தத் தாக்குதலின் அனைத்து அம்சங்களும் இன்று நடைபெறும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.