சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடியில் தைவானிய தொழில்பூங்கா: அமைச்சர் டிஆர்பி ராஜா!

சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் சர்வதேச தரத்தில் தைவானிய தொழில்பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். இதைத்தொடர்ந்து, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலளித்துப் பேசியதாவது:-

இந்தியாவில் உற்பத்தித்துறை, சேவைத்துறை, ஆட்டோமொபைல், ஜவுளி என ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதோடு உயர் தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தியிலும் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு 1.66 பில்லியன் டாலராக இருந்த எலெக்ட்ரானிக் சாதனங்களின் ஏற்றுமதி 2024-ல் 9.56 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் ஆசை. தென்மாவட்டங்களில் எந்தவொரு தொழில்வளர்ச்சியும் இல்லை என நீண்ட காலமாகக் கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு வந்த முதலீடுகளில் 30.32 சதவீத முதலீடுகளை தென்தமிழகத்தில் கொண்டுவந்து குவித்தது திமுக அரசு. தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகள் வரலாறு காணாத தொழில்வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.

தொழிற்சாலைகளையே கண்டிராத மத்திய டெல்டா மண்டலத்துக்கு ரூ.35 ஆயிரம் கோடி முதலீட்டுகளை கொண்டுவந்தவர் முதல்வர். மதுரையில் மாபெரும் டைடல் பூங்கா கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலூர் தொகுதியில் காலணி பூங்கா அமைக்கப்பட உள்ளது. விரைவில் திருநெல்வேலி, கன்னியாகுமரியில் ஐடி பூங்காக்களும், ஈரோடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் புதிய டைடல் நியோ பூங்காக்களும் அமைக்கப்படும்.

தைவான் நாட்டு நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்காக, சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 20 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சர்வதேச தரத்தில் தைவானிய தொழில்பூங்கா அமைக்கப்படும். தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் 600 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வண்ணம் மினி டைடல் பூங்கா நிறுவப்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சின்னசேலம் வட்டத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் ரூ.650 கோடியில் சிப்காட் தொழில்பூங்கா உருவாக்கப்படும். தென்காசி மாவட்டத்தில் 3 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ரூ.300 கோடி செலவில் 150 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்கப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும் 2 ஆயிரம் புதிய வேவைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கிலும் ரூ.200 கோடி முதலீட்டில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில்பூங்கா நிறுவப்படும். அதேபோல் வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீட்டில் 250 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில்பூங்கா உருவாக்கப்படும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.250 கோடி முதலீட்டில் 125 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படு்ம். இதன்மூலம் 2,500 பேருக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம், ஒரகடம், வல்லம் வடகால் தொழில்பூங்காக்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக ரூ.120 கோடி மதிப்பீட்டில் 2 ஆயிரம் படுக்கைகள் கொண்ட தொழிலாளர் தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் (டிக்) மூலம் கடன்பெறும் சுமார் 1,300 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், கடன்களுக்குப் பெறப்படும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான ஆய்வுக்கட்டணம் நடப்பு நிதி ஆண்டில் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ராஜாமடத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ.200 கோடி முதலீட்டில் கடல்சார் உணவுப்பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.