பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக எஸ்.வி.சேகர் சரணடைய அளிக்கப்பட்ட காலக்கெடுவை ஜூலை 17-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவு.
பிரபல நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து கடந்த 2018-ம் ஆண்டு தனது சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து ஒன்றை பதிவிட்டார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் தீர்ப்பளித்தது. சிறப்பு கோர்ட்டு விதித்த ஒரு மாத சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.
ஒரு மாத சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரியும், தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க கேட்டும், நடிகர் எஸ்.வி.சேகர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. பின்னர் புகார்தாரரான பெண் பத்திரிகையாளரை தொடர்பு கொண்டு மன்னிப்பு கோர எஸ்.வி.சேகருக்கு அவகாசம் அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்காக சரணடைவதற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை ஜூலை 17-ந் தேதி வரை நீட்டிக்கிறோம் என உத்தரவிட்டனர்.