டாஸ்மாக் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு!

அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 60 மணி நேரம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகமும், தமிழக அரசு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் சட்டவிரோதம் என அறிவிக்க முடியாது என்று கூறிய ஐகோர்ட், மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக, டாஸ்மாக் தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டில் இருந்து வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரி மனுவை தாக்கல் செய்து பின்னர் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.