தவெக என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது: புஸ்ஸி ஆனந்த்!

தமிழக வெற்றிக் கழகம் என்றாலே எல்லோருக்கும் ஒரு பயம் வந்துவிட்டது. வாக்குச்சாவடி முகவர் என்றால் சாதரண ஆட்கள் அல்ல. கட்சியின் வெற்றிக்கு நீங்களே பொறுப்பு என்று தவெக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு கோவை மாவட்டம், குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. கருத்தரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் பத்து மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், நாளை 13 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த கருத்தரங்கில் வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான களப் பணிகள் மேற்கொள்வது குறித்தும், ஆட்சி மாற்றத்துக்கான செயல்பாடுகள் குறித்தும் விரிவாகப் பேசப்படவுள்ளது. சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த விஜய்க்கு, விமான நிலைய வளாகத்தில் ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பை அளித்தனர். உற்சாகத்தில் தொண்டர்கள் தவெக கட்சிக் கொடியை விஜயை நோக்கி வீசத் தொடங்கினர். அந்த கட்சிக்கொடிகளை அன்போடு பெற்று தனது கழுத்தில் அணிந்து கொண்டு, அவர்களை நோக்கி கையசைத்தார் விஜய். திறந்த வேனில் ஏறி நின்று, தொண்டர்களின் வரவேற்பை விஜய் ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில், விஜய் தலைமையில் வாக்குச்சாவடி முகவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொண்டர்கள், ரசிகர்கள் கல்லூரியின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வரத் தொடங்கியதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அப்போது, முண்டியடித்துக் கொண்டு வந்த தொண்டர்களிடம் அவர்களது பாதுகாப்புக்காக வேண்டுகோள் விடுத்தார். அப்போது, “பிரண்ட்ல், அங்க நிறைய ஒயர் போகுது.. பாதுகாப்புக்காக சொல்றேன், கொஞ்சம் பின்னாடி வந்துடுங்க. இன்னும் 2, 3 மணி நேரம் இங்க உங்ககூடதான் இருக்கப்போறேன். தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க என்று விஜய் கூறினார். இதைத்தொடர்ந்து, தொண்டர்கள் அமைதியைக் கடைப்பிடித்தனர்.

கூட்டத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது:-

வாக்குச்சாவடி முகவர் என்றால் சாதரண ஆட்கள் இல்லை. கட்சி வெற்றிக்கு நீங்களே பொறுப்பு. நமது வெற்றி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. உங்களைப் பார்த்துதான் மக்கள் ஓட்டு போடுவார்கள். தமிழக வெற்றிக் கழகம் என்றாலே எல்லோருக்கும் ஒரு பயம் வந்துவிட்டது. கோடி ரூபாய் கொடுத்தாலும் எங்கும் செல்லாமல் தளபதிக்காக இருக்கும் தொண்டர்கள் நீங்கள். இங்குள்ள 8,500 பேர் 8. 5 லட்சம் பேருக்குச் சமம். சில முக்கியமான விஷயங்கள் இங்கு பேசப்படவுள்ளது. அதனை கவனத்தில் கொண்டு நீங்கள் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தொகுதியில் எப்படி பார்த்தாலும் 80 ஆயிரம் வீடு இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு ஓட்டிலும், ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கக்கூடியவர் நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர். ஒரு தொகுதியில் நமக்கு கண்டிப்பாக 80 ஆயிரம் ஓட்டு கிடைத்துவிடும். அது பெரியதல்ல. ஒரு தொகுதியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டு வாங்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டும் நமக்கு மிகவும் முக்கியம். 234 தொகுதியிலும் தலைவர்தான் வேட்பாளர் என்று கருதி நீங்கள் வேலை செய்ய வேண்டும். சிறிய தொகுதியில் கூட ஓட்டுக்களை பெற வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் உள்ள பொதுமக்களின் சிறிய பிரச்சனைகளைக் கூட செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.