பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரர் அல்ல: கனிமொழி!

பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.

கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நடைபெற்றுவரும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வழங்குபவர்தான் சுயமரியாதைக்காரர்.

ஆண், பெண், நிறம், பொருளாதாரம் என பல்வேறு வகைகளில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. மதவாதிகள் சிலர், தாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உடைக்கக் கூடாது என நினைக்கின்றனர். தவறான அரசியல் மூலம் தமிழ்நாட்டில் சாதி என்பது மெல்ல நுழைகிறது, அதைத் தவிர்க்க வேண்டும்.

தேர்தல் வெற்றி, கட்சிப் பொறுப்பு என எத்தனையோ பொறுப்புகள் எனக்கு கிடைத்தாலும், ‘என் வீட்டில் அனைவரும் திமுக. என் மகள் மட்டும் திக’ என என் அப்பா கருணாநிதி கூறியதை மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.