தமிழகத்தில் மதவாதம் எங்கே இருக்கிறது என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம், பகல்காம் சம்பவம் குறித்து வானதி சீனிவாசன் பேசியிருந்த நிலையில் முதல்வர் அதற்கு பதில் அளித்தார். இன்றைய தினம் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடந்தது. அப்போது வானதி குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில் கோவையில், சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்தது உண்மைதான். அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் மதவாத எதிர்ப்பு சக்தி எங்கே இருக்கிறது என்பதை குறிப்பிட்டு சொல்லுங்கள்.
பகல்காம் சம்பவத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடுகளை நான் விமர்சித்து பேசவில்லை. என் அறிக்கையில் பகல்காம் சம்பவத்திற்கு மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றே சொல்லியிருக்கிறேன். பாஜக ஆளும் மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். தமிழகத்தில் காஷ்மீர் போன்ற சம்பவம் நடைபெறாது. தமிழகத்தில் மதவாத சக்திகள் நுழைய முடியாது. ஆடிட்டர் ரமேஷ் கொலை, அதிமுக ஆட்சியில் நடந்தது. அது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
பள்ளிக் கல்வி நிதி என்னவானது? மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்கின்றனர். இன்னும் பல திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசின் நிதி இந்த ஆட்சிக்கு வராமல் உள்ளது. பாஜக தலைமையிடம் பேசி தமிழகத்திற்கு சேர வேண்டிய நிதியை பெற்றுத் தாருங்கள் என வானதியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. எனக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். என்னைப் போலவே தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பார்க்கும் போது தமிழகம் அமைதி பூங்காவா என்ற கேள்வி எழுகிறது என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டசபையில் குற்றம்சாட்டியிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, நீங்கள் சட்டசபை உறுப்பினர், உங்களுக்கான பாதுகாப்பை அரசு தரும் என்றும் பேசியிருந்தார். அப்போது அமைச்சர் ரகுபதி பேசுகையில் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் அமைதிப்பூங்காவாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து துரைமுருகன் பேசுகையில், ராமாயணத்திலேயே பெண்ணை தூக்கிச் சென்றார்கள். நல்லவர்கள், கெட்டவர்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள். எந்த சம்பவமாக இருந்தாலும் நடவடிக்கை என்ன என்பதைதான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்கிறார். ஆனால் மே 6 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 23 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்திருந்தார்கள் என துரைமுருகன் தெரிவித்தார்.
அப்போது அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழகம் முன்னிலை மாநிலமாக இருக்கிறது என்றார். அப்போது வானதி, நான் எந்த குற்றச்சாட்டை வைத்தாலும் பாஜக ஆளும் மாநிலங்கள் குறித்து ஏன் பேசுகிறீர்கள். தமிழகத்தை வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடுங்கள் என வானதி பேசியிருந்தார். வானதியின் பேச்சுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, கீதா ஜீவன் உள்ளிட்டோர் பதில் அளித்த நிலையில் முதல்வர் ஸ்டாலினும் பதில் அளித்திருந்தார்.