காஷ்மீரின் பகல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத உள்ளடக்கத்தை பரப்பியதற்காக மொத்தம் 6.3 கோடி சந்தாதாரர்களை கொண்ட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் பேரில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. டான், சமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார், ஜியோ நியூஸ், சுனோ நியூஸ் உள்ளிட்ட செய்தி சேனல்களுக்கும் பத்திரிகையாளர்கள் இர்ஷாத் பாட்டி, அஸ்மா ஷிராசி, உமர் சீமா, முனீப் ஃபரூக் ஆகியோரின் யூடியூப் சேனல்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும் தி பாகிஸ்தான் ரெஃபரன்ஸ், சமா ஸ்போர்ட்ஸ், உசேர் கிரிக்கெட், ராசி நாமா ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த சேனல்களை ஒருவர் அணுக முயன்றால், “தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு தொடர்பான அரசின் உத்தரவு காரணமாக இந்த சேனல் தற்போது இந்த நாட்டில் கிடைக்கவில்லை. கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து கூகுள் வெளிப்படைத்தன்மை அறிக்கையை (transparencyreport.google.com) பார்வையிடவும்” என்று வருகிறது.
இதுபோல் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘சுற்றுலாப் பயணிகள் மீதான கொடூர தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது’ என்ற தலைப்புடன் பிபிசி ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. இத்தலைப்பு சுற்றுலா பயணிகளை இந்தியா கொன்றது போல் இருப்பதாக பலர் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பாக பிபிசி இந்தியாவின் தலைவர் ஜாக்கி மார்டினுக்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசி செய்திகளை மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க உள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.