குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் கொண்ட இணையப்பக்கம்: மு.க. ஸ்டாலின்!

குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் சூட்ட விரும்புபவர்களுக்கான இணையப்பக்கம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நிதன் சிற்றரசு என்பவர் எக்ஸ் தளம் மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று, தம்பி அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வர் பதிலளித்துள்ளார். மேலும், குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் – அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் மயிலாப்பூர் திமுக எம்எல்ஏ வேலுவின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக எம்எல்ஏ வேலு, தனது மகளுக்கு அனுஷா என்று பெயர் வைத்திருக்கிறார். அது தமிழ் பெயர் அல்ல. அது பற்றி பிரச்னையில்லை. ஆனால், இனி வரும் காலங்களில் மணமக்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயரை சூட்டுங்கள் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

மேலும், குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயரை சூட்டுங்கள்.. அதுதான் எனது வேண்டுகோள் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த விடியோவை இணைத்திருக்கும் நிதன் சிற்றரசு என்பவர், குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைதளங்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் தலைவரே என்று தமிழக முதல்வர் ஸ்டாலினையும் டேக் செய்திருந்தார்.

இதனைப் பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தம்பியின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.