மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான 2025ஆம் ஆண்டு இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த நுழைவுச் சீட்டானது நீட் தேர்வர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய மிக முக்கிய ஆவணமாகும். தேர்வுக்கூடத்துக்குச் செல்லும்போது மாணவர்கள் இதனை கொண்டு செல்ல வேண்டும். தேர்வுக்கு வருவது தொடர்பான அனைத்து விவரங்களும் இதில் விரிவாக தெரிவிக்கப்பட்டிருக்கும்.
மே 4ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் நடைபெறவிருக்கிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்திலிருந்து நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண்களையும் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 566 நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. மே 4ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு நடைபெறும் நகரம் குறித்த அறிவிப்பு என்டிஏ இணையதளத்தில் கடந்தவாரம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நீட் நுழைவுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு மே 1ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே ஏப். 30 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. இதன் மூலம், நுழைவுத்தேர்வு மையத்துக்கு எவ்வாறு செல்வது என்பது குறித்து திட்டமிட தேர்வர்களுக்கு போதுமான நேரம் கிடைத்துள்ளது.
நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலமே மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் ஒரு முறை நடத்தி வருகிறது. அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு வரும் மே 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இணையதளம் மூலமாகவே நடந்து முடிந்தது. இன்று நுழைவுச் சீட்டு வெளியாகியிருக்கிறது.