சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க முடியும்: ராகுல் காந்தி!

மத்திய அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பைக் காங்கிரஸின் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிந்துவிட்டதாகவும் இதன் மூலம் 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இன்றைய தினம் பிரதமர் மோடி தலைமையில் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்குப் பல்வேறு கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதேநேரம் சில கட்சிகள் இது குறித்து கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.

இதற்கிடையே மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்புக்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்குப் பணிந்துவிட்டதாகவும் சாதி வாரி கணக்கெடுப்பு மூலம் 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க முடியும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

சாதி வாரி கணக்கெடுப்பு என்பது எங்களின் முதல்படி என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். சாதி வாரி கணக்கெடுப்பு மூலம் நாட்டிற்கு ஒரு புதிய வளர்ச்சியைக் கொண்டுவருவதே எங்கள் தொலைநோக்குப் பார்வை. இடஒதுக்கீடு மட்டுமல்ல.. சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும். ஓபிசி, தலித்துகள், ஆதிவாசிகள் என யாராக இருந்தாலும், இந்த நாட்டில் அவர்களின் பங்களிப்பு என்ன? சாதி கணக்கெடுப்பு மூலம் அது கண்டறியப்படும்.. நாங்கள் இன்னும் ஒரு விஷயத்தைத் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டோம். அதாவது தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது பற்றியது. இது ஏற்கனவே சட்டமாக இருக்கிறது. பாஜக என்டிஏ அரசு அதை அமல்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

நாங்கள் இதற்கு முன்பே சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று நாடாளுமன்றத்தில் கூறியிருந்தோம். இதன் மூலம் தற்போது இட ஒதுக்கீட்டை 50%க்கு மேல் உயர்த்த தடையாக இருக்கும் செயற்கை சுவரை அகற்றுவோம். திடீரென்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு, சாதி கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதை முழுமையாக ஆதரிக்கிறோம்.. ஆனால், எப்போது நடத்தப்படும் என்பதற்கு ஒரு காலக்கெடுவை விரும்புகிறோம். எப்போது தொடங்கும் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பில் தெலுங்கானா ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.