60 ஆயிரம் வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில்சிறப்பு திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 60 ஆயிரம் வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மின்னணுவியல் துறையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழகம் ஏற்கெனவே அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. மின்னணுவியல் துறையில், மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவிக்கவும், குறைக்கடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்க்கவும், தமிழக அரசு, தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கையை அறிமுகப்படுத்தியது. இக்கொள்கை மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ வழிவகுத்துள்ளது.

இந்நிலையில், மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தை நேற்று வெளியிட்டார். மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மின்னணு உபகரணங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் பயனடையும் நிறுவனங்களை மாநிலத்துக்கு ஈர்க்கும் வகையில் மத்திய அரசுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மானியத்துக்கு இணையாக தமிழக அரசும் ஊக்கத் தொகை வழங்க இத்திட்டம் வழி செய்யும். இதன்மூலம், தமிழகத்தில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க இயலும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:-

தமிழகம் மிகப்பெரிய தொழில் வளர்ச்சியை அடைந்துள்ளது. மின்னணு துறை வளரச்சியில் நாட்டிலேயே தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. 14.6 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் ஒன்றேகால் லட்சம் கோடி அளவுக்கு மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. இதில், 100 பில்லியன் டாலர் இலக்கை அடைய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மொபைல் போன் கேமரா, டிஸ்பிளே, எஸ்எம்டி காம்போனன்ட்ஸ், பிட்னஸ் ரிங்பேண்ட் ஆகிய தயாரிப்புகள் இதில் முக்கிய இடம் பெறும். இதன் மூலம், ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடு மின்னணு உதிரிபாக சிறப்பு திட்டத்தை முதல்வர் இன்று வெளியிட்டுள்ளார். முதலீட்டாளர்களுக்கு எதை அறிவித்தாலும் குறிப்பாக ஒரு ஊக்கத்தொகை வழங்குவதாக வாக்குறுதி அறிவித்தால் அதை நிறைவேற்றாமல் இருந்தது இல்லை.

நாட்டின் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் 41.23 சதவீதம் தமிழகத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது மின்வாகன உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அனைத்து மின்னணு பொருட்களுக்கும் தயாரிக்க தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் தமிழகத்தில் தயாரிக்கப்பட உள்ளது, இங்கு தயாரிக்கப்படும் பொருளின் தரத்தில் வேறு எங்கும் அந்த பொருளை தயாரிக்க முடியாது. இதற்கு தேவையான உட்கட்டமைப்பு, மனித வளம் ஆகியவை தமிழகத்தில்தான் உள்ளது.

மேலும் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் திறக்கப்பட உள்ளது. அதற்கான முதல் கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி அளிக்காவிட்டாலும், தமிழகம் வளர்ச்சியடையும். மின்வாகன உற்பத்தி மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் முதலீட்டை தமிழகத்துக்கு அதிகமாக கொண்டுவர நாங்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.