நாடு முழுவதும் நாளை போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
போர்க்காலங்களின்போது இந்திய எல்லைப் பகுதிகளில் அந்நிய போர் விமானங்கள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்பப்படுவது வழக்கம். நாளை நடைபெற உள்ள ஒத்திகையின்போது இதுபோல சைரன் ஒலியை எழுப்ப வேண்டும். பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். சைரன் ஒலியின்போது அந்த இடங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக செல்வது குறித்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.
போர்க்காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தன்னார்வலர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும். குறிப்பாக போரில் காயமடைந்தவர்களை மீட்பது, எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை பத்திரமாக பாதுகாப்பது குறித்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.
இரவில் மின்சாரத்தை துண்டித்து வெளியே தெரியாத வகையில் அகல்விளக்கு ஒளியில் அன்றாட பணிகளை மேற்கொள்வது குறித்து மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக அணு மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வசிப்போர் போர்க்காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும்.
எதிரிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுவது, பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் பாதுகாப்பாக தங்கியிருப்பது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் எல்லையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதாள பதுங்கு அறைகளை ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ளனர். ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களையும் வாங்கி வைத்திருக்கின்றனர்.
இதேபோல பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் எல்லையோர கிராமங்களிலும் போர்க்கால ஒத்திகை தொடங்கப்பட்டிருக்கிறது. பஞ்சாபின் பெரோஸ்பூர் பகுதியை ஒட்டிய கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் இன்வெர்ட்டர், ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வீடுகளில் மின் விளக்குகளை ஒளிரச் செய்யக்கூடாது. வாகனங்களின் முகப்பு விளக்குகளைகூட ஒளிரச் செய்யக்கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தினர். இதை எல்லையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த கண்டிப்புடன் பின்பற்றினர்.
கடந்த 1971-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. அப்போது நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகைகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று அவசரமாக கூடியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் கட்டிடத்தில் இந்தக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பினர் பகல்காமில் நடத்திய தாக்குதல் குறித்து இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதி கடும் கண்டனத்தை பதிவு செய்ததாகத் தெரிகிறது. அதேபோல், பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆக்ரோஷமான நடவடிக்கை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்டவை தொடர்பாக பாகிஸ்தான் சார்பிலும் புகார் பதிவு செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவ் சில நாட்களுக்கு முன்பு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடன் தொலைபேசியில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா பாகிஸ்தான் நாடுகள் விரும்பினால் ரஷ்யா சமரசத்தில் ஈடுபட தயாராக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் மீது என்ன வகையான தாக்குதல் நடத்தப்படும் என்பது குறித்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது: பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்தே ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி வருகின்றனர். 2014-ல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதேபோல ராணுவ நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம். சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு ரத்து செய்திருக்கிறது. இது இந்தியாவுக்கு சாதகமானதாக அமைந்திருக்கிறது.
கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மட்டுமே போர் நடைபெற்றிருக்கிறது. இந்தமுறை இந்திய விமானப்படை பாகிஸ்தானின் மேற்கு, வடக்கு எல்லைப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது. அதாவது பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுகம், அந்த மாகாண விமானப்படை தளங்களை இந்திய போர் விமானங்கள் தாக்கலாம். மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் ரூடாகி நகரில் இந்திய விமானப் படையின் ரகசிய தளம் உள்ளது. அங்கு சுகோய் ரக போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த தளத்தில் இருந்து பாகிஸ்தானின் மேற்கு, வடக்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம்.
ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா தனது எதிரிக்கு மின்சார நாற்காலி தண்டனையை நிறைவேற்ற திட்டமிடவில்லை. மாறாக எதிரியின் கழுத்தை சுற்றி நீளமான கயிறால் இறுக்கி வருகிறது’ என்று கூறியுள்ளார். தற்போதைய சூழலில் ஆப்கன் முன்னாள் துணை அதிபரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.