தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி முதல் மணல் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் யுவராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகம் முழுவதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரிகளிலும் அரசு மணல் விற்பனை கிடங்குகளிலும் முறைகேடு நடந்ததாக கடந்த 2023-ம் ஆண்டு செப்.12-ம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனையிட்டு வழக்கு பதிவு செய்தனர். அப்போது முதல் அனைத்து அரசு மணல் விற்பனை கிடங்குகளும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால், மணல் எடுப்பதற்கு என்றே வடிவமைக்கப்பட்ட 55,000-க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை வாய்ப்பை இழந்து இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மணல் குவாரி இயங்காததால், இதற்கு மாற்றாக செயற்கை மணல் (எம்.சாண்ட்) பயன்படுத்தப்படுகிறது. குவாரி உரிமையாளர்களால் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயர்த்தப்பட்டது. யூனிட்டுக்கு ரூ.1,000 வீதம் 2 முறை உயர்த்தி உள்ளனர். கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் கட்டுமானப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து, சமீபத்தில் ரூ.1,000 விலை குறைக்கப்படும் என அரசு அறிவித்தது.
ஆனால், எம்.சாண்ட் விலை குறைக்கப்படவில்லை. கல் குவாரி கிரசர்களுக்கு கேரளாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி ஆகியவை லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதுதவிர, கர்நாடகா மாநிலத்துக்கும் கொடுக்கப்படுகிறது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கல் குவாரி கிரசர்களை அரசுடமையாக்க வேண்டும்.
மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணல் குவாரிகளை விரைவாக திறந்து இயக்குவது, எம்-சாண்ட், பி.சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலை உயர்வை தடுப்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 23-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மணல் லாரிகளை நிறுத்திவைத்து, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.