புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கோவில் தேர் திருவிழாவில் இருதரப்பினர் இடையே நேற்று இரவு கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மொத்தம் 6 பேர் காயமடைந்த நிலையில் குடிசை வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதோடு, பைக்குகளும் தீவைத்து எரிக்கப்பட்டது. அதோடு அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில் அதிரப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு என்ற கிராமம் உள்ளது. இங்கு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கோவிலின் திருவிழா என்பது தொடங்கியது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர் திருவிழா என்பது பிரசித்திப்பெற்றது. அதன்படி நேற்று இரவு தேர் திருவிழா தொடங்கி நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தேர் திருவிழா அமைதியாக முடிவடைந்தது. இதையடுத்து அனைவரும் கோவிலில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். வடகாடு தெற்கு ஆர்ச் அருகே நின்ற சில இளைஞர்களுக்கும், இன்னொரு பிரிவை சேர்ந்த இளைஞர்களுக்கு திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் லேசாக ஏற்பட்ட வாக்குவாதம் நேரம் ஆக ஆக அதிகமானது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து இருதரப்பினரும் மாற்றி மாற்றி தாக்கி உள்ளனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதற்கிடையே அந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் தங்களின் தரப்புக்கு ஆதரவாக சிலரை அழைத்து கொண்டு தாக்கி நபர்கள் இருக்கும் இடத்துக்கு சென்றனர். அங்கு இருதரப்பு மோதல் என்பது தீவிரமானது. ஒரு தரப்பினர் அரிவாளை எடுத்து 2 பேரை வெட்டி உள்ளனர். இவர்கள் உள்பட மொத்தம் 6 பேர் காயமடைந்தனர். இதற்கு பழித்தீர்க்கும் வகையில் இன்னொரு தரப்பினர் குடிசைகளுக்கு தீவைத்துள்ளனர். அதோடு 2 பைக்குகளுக்கு தீவைத்து எரித்தனர். மேலும் பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் வடகாடு கிராமம் பெரும் பதற்றத்துக்கு உள்ளானது. இதுபற்றி தகவலறிந்ததும் போலீசார் வந்து தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க மாவட்ட எஸ்பி அபிசேக் குப்தா தலைமையில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.