இந்தியாவை தாக்க முப்படைகளுக்கும் பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக ‛ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு நம் நாடு பதிலடியை கொடுத்துள்ளது. இதில் நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் நிலைக்குலைந்து போய் உள்ள பாகிஸ்தான் தற்போது அந்த நாட்டின் முப்படைகளுக்கும் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

பயங்கரவாதிகளை உருவாக்கி உலகம் முழுவதும் சதிவேலைகளை செய்து தாக்குதல்களை அரங்கேற்றும் பணியை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் தனது ஆதரவு பயங்கரவாதிகளை வைத்து நம் நாட்டின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற அமைப்பு உள்ளது. இந்த தாக்குதலுக்கு இன்று பதிலடி கொடுத்தது.

பகல்காம் தாக்குதல் நடந்து 15 நாட்கள் ஆன நிலையில் இன்று பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலில் மொத்தம் 70 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 9 பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் தரைமட்டமாகி உள்ளன. இந்த தாக்குதலில் நம் நாடு மனிதாபிமானத்தை கடைப்பிடித்தது. நம் நாடு நினைத்தால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை போல் அப்பாவிகளை குறிவைத்து தாக்கி இருக்கலாம். ஆனால் நம் நாடு அப்படி செய்யவில்லை. அப்பாவிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பயங்கராவதிகளின் முகாம்களை மட்டுமே குறிவைத்து துல்லியமாக ஏவுகணைகளை வீசி தாக்கி உள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி மக்கள் யாரும் சாகவில்லை.
ஆனால் வழக்கம்போல் பாகிஸ்தான் நாடகமாட தொடங்கி உள்ளது. நம் நாடு நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதாக பொய்களை கூறி வருகிறது. அதுமட்டுமின்றி நம் நாட்டின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயாராகி வருகிறது.

இதற்கிடையே தான் இன்று பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நடந்தது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. பாகிஸ்தான் அமைச்சர்கள், முதல்வர்கள், முப்படை அதிகாரிகள், முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இந்தியாவை பழிவாங்க வேண்டும் என்று முப்படைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு அனைத்து வகையான சுதந்திரத்தையும் முப்படைகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் வழங்கி உள்ளது. அதன்படி இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கான நேரம், தேதி, தாக்குதல் நடத்தப்படும் இடம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்து துல்லியமாக தாக்குதல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தானின் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், ‛‛இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி அப்பாவிகளை கொன்றுள்ளது. இதனால் ஐநா சாசனத்தின் பிரிவு 51ன் படி தாக்குதல் என்பது நடத்த வேண்டும். ஐநா சாசனத்தின் பிரிவு 51 என்பது என்பது அப்பாவிகளை கொன்றவர்களுக்கு பதிலடி கொடுக்கும் தற்காப்பு நடவடிக்கையாகும். அதன்படி எதிரி நாடு மீது பதிலடி தாக்குதல் நடத்த முப்படைகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பதிலடி நடவடிக்கைகளின் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் முப்படைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.