இந்திய ராணுவ நடவடிக்கையை பாராட்டுகிறேன்: கமல்ஹாசன்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவ நடவடிக்கையை பாராட்டுகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பகல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் நடத்திய இந்த அதிரடி தாக்குதலுக்கு பகல்காம் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் பல்வேறு தரப்பினரும் இந்த நடவடிக்கைக்கு தங்களின் ஆதரவை தெரிவத்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் இந்திய ராணுவ நடவடிக்கையை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பெருமைமிக்க இந்தியா தனது ஆயுதப் படைகளுடன் ஒற்றுமையாக நிற்கிறது. கோழைத்தனமான பயங்கரவாதச் செயல்களால் பிரிக்கப்படாத ஒரு வலிமையான தேசத்தின் உறுதியான பதில் இது. இந்திய அரசு எடுத்த தீர்க்கமான மற்றும் மூலோபாய ராணுவ நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.