ஆதித்யா தாக்கரே மீது வழக்கு பதிய குழந்தைகள் ஆணையம் உத்தரவு!

மும்பை ஆரே கார் ஷெட்டுக்கு எதிரான போராட்டத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆதித்யா தாக்கரே மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மும்பை காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு, ஆரே நிலத்தில் கார் ஷெட் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு எதிராக சுற்றுசூழல் அமைப்பினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே பங்கேற்றார். அந்த போராட்டத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக சஹ்யாத்ரி உரிமைகள் மன்றத்தின் தலைவர் த்ரிஷ்டிமன் ஜோஷி என்பவர் தேசிய குழந்தைகள் ஆணையத்திடம் புகார் அளித்தார்.

இந்த புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஆணையம், மும்பை காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளது. போராட்டங்களில் குழந்தைகளைப் பயன்படுத்துவது சிறார் நீதிச் சட்டத்தை மீறுவதாகும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக, ஆதித்ய தாக்கரே உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட குழந்தைகளை குழந்தைகள் நலக் குழுவில் ஆஜர்படுத்தி, அவர்களின் வாக்குமூலங்களையும் பதிவு செய்ய வேண்டும். இந்த அனைத்து நடவடிக்கை அறிக்கைகளையும் எஃப்ஐஆர் நகலுடன் மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.