வன்னியர் சங்க மாநாட்டுக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி!

சென்னை மாமல்லபுரத்தில் வரும் 12ஆம் தேதி வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடுக்கு அனுமதி வழங்க கூடாது என தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரள வேண்டும் என பாமக தலைமை உத்தரவிட்டுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 3 நாளே இருக்கும் நிலையில், விழா குழு தலைவரான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், மாவட்ட செயலாளர் இதற்காக பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் நாள் அன்று பொதுமக்கள் இசிஆர், ஓஎம்ஆர் உள்ளிட்ட சாலைகளை பயன்படுத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், பாமக சார்பில் நடத்தவுள்ள சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு அனுமதி வழங்க கூடாது என தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது என வடநெமிலி பஞ்சாயத்து தலைவர் பொன்னுரங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே வரும் மே 11 ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்தும் சித்திரை முழு நிலவு பெருவிழா நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ம் ஆண்டு பாமக, வன்னியர் சங்கம் நடத்திய சித்திரை முழு நிலவு திருவிழாவில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சாதிய கலவரம் உருவாகி, பட்டியலின மக்கள் தாக்கப்பட்டு, அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வுக்கு பின், சித்திரை முழு நிலவு கூட்டத்தில் அரசு அனுமதி அளிப்பதில்லை.

இந்நிலையில் திருபோரூர் தாலுகாவில், திருவிடந்தை நித்திய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலத்தில் பாமக சார்பில் சித்திரை முழு நிலவு கூட்டம் நடத்துவது, வடநெமிலி பஞ்சாயத்து பகுதியில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பொதுமக்களின் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் உருவாகும் சூழல் இருப்பதால் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவுக்கு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் சித்திரை முழு நிலவு கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என வடநெமிலி பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றி இருப்பதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதி எல்.விக்டோரிய கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முகிலன் கடந்த 5 தேதி நிகழ்ச்சிக்கு 42 நிபந்தனைகள் உடன் அனுமதி வழங்கியுள்ளதாகவும், எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஏற்கனவே நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளதால் அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட முடியாது என தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.