போர் வேண்டாம் என்பதுதான் நம்முடைய வேண்டுகோள்: திருமாவளவன்!

இந்திய ராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கையை அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஆதரிக்க வேண்டும் என்றும், அதேசமயம் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போராக மாறிவிடக் கூடாது என்று விசிக திருமாவளவன் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவை கொதிப்படையச் செய்த நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்திருந்த நிலையில், புதன்கிழமை இரவு இந்தியாவின் 15 நகரங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தது. ஆனால், நடுவானில் வைத்தே இந்தியா அந்த தாக்குதலை முறியடித்தது. இதையடுத்து இந்திய பகுதிகளின் மீது டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் அத்துமீறி இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தியா மீது மீண்டும் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் அத்துமீறல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று அதிகாலையில் பாகிஸ்தான் விமானப் படைத் தளங்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதலை மேற்கொண்டது. இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கையை அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஆதரிக்க வேண்டும் என்றும், அதேசமயம் இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போராக மாறிவிடக் கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நாம் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம். இந்த ராணுவ நடவடிக்கையை ஆதரிக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை பேரணியை அறிவித்திருக்கிறார். இந்தப் பேரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கவுள்ளது. நானும் பேரணியில் பங்கேற்கவுள்ளேன். இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்கிற வகையில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஆதரிக்க வேண்டும். அதே வேளையில் இது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போராக மாறிவிடக் கூடாது.

போர் வேண்டாம் என்பதுதான் நம்முடைய வேண்டுகோள். இந்திய மக்களும் போரால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்கிற பெரும் கவலையோடு, மத்திய அரசுக்கும், இந்திய முப்படைக்கும் போர் வேண்டாம் என்கிற வேண்டுகோளை விடுக்கிறேன்.

இந்த அசாதாரண சூழலில், இந்திய ராணுவத்திற்கு எதிராகவோ அல்லது இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராகவோ தவறான கருத்துகளை பதிவிடுவது ஏற்கத்தக்கது அல்ல. இத்தகைய பதட்டமான சூழலில், விமர்சனம் என்ற பெயரில் எதிர்கருத்துகளை யாரும் பதிவு செய்யக் கூடாது. அப்படி பதிவு செய்திருந்தால் அது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.