எந்த ஒரு அவசர நிலையையும் சமாளிக்க முழு அளவில் தயாராக இருப்பதாக ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்த்தி வந்தது. இதனால், ஜம்மு காஷ்மீரில் எல்லையோர மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்க முழுமையாகத் தயாராக இருப்பதாக ஜம்மு – காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
எந்தவொரு சூழ்நிலையையும் கையாள ஜம்மு காஷ்மீர் அரசு முழு அளவில் தயாராக இருக்கிறது. சுகாதாரத் துறை அதன் அவசரகால நெறிமுறைகளை முழுமையாக செயல்படுத்தியுள்ளது. எந்தவொரு மருத்துவ அவசரநிலைகளையும் கையாள சுகாதாரத்துறை முழுமையாகத் தயாராக உள்ளது.
பொதுமக்களிடம் அச்சம் தேவையில்லை, அமைதியாக இருக்குமாறும், பீதியடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றவும். சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களும் சரிபார்க்கப்படாத கூற்றுகளும் தேவையற்ற பீதியை ஏற்படுத்தும். வதந்திகளில் ஈடுபடுவதையோ அல்லது பரப்புவதையோ தவிர்க்குமாறு குடிமக்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
துல்லியமான தகவலுக்கு நம்பகமான செய்தி சேனல்கள் மற்றும் அரசாங்க தகவல்தொடர்புகளை மட்டுமே நம்புங்கள். பொதுமக்கள் மற்றும் குறிப்பாக ஊடகங்களில் பணிபுரிவோம் தகவல்களைப் பகிர்வதில் பொறுப்புடன் இருக்கவும், இது தொடர்பாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த காலகட்டத்தில் அமைதியையும் ஒழுக்கத்தையும் பேணுவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.