நான்காண்டு கால ஆட்சியில் திமுக எதையும் செய்யவில்லை என்றும், சட்டம் ஒழுங்கு பாதிப்பு, போதை பொருட்கள் நடமாட்டம் ஆகியவைதான் திமுக அரசின் 4 ஆண்டு சாதனைகள் என்றும் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கிருஷ்ணகிரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த முனுசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உலக அரங்கில் இந்தியா வலிமைமிக்க நாடு என்பதை நிருபிக்கும் வகையில் பிரதமர் மோடியின் செயல்பாடு உள்ளது. அவரது அனுபவம், ராஜதந்திரத்தால் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றி நடைபோடுகிறார். அதற்கு அதிமுக சார்பில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய ராணுவம் நீண்டக்கால போர் அனுபவம் கொண்டதை போல் செயல்பட்டு உள்ளது. சங்க காலத்தில் அறப்போர் செய்ததை போல், செயல்பட்டு மக்களை எந்தவகையிலும் துன்புறுத்தாமல், தீவிரவாதிகளை மட்டுமே குறி வைத்து தாக்கியுள்ளனர். ராணுவ முகாம்கள், ராணுவத்தின் விமான தளங்களையும் குறித்து வைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். எந்த வகையிலும் மக்களை துன்புறுத்தாமல், முறையான போரை நடத்திய வலிமைமிக்க இந்திய ராணுவத்திற்கு அதிமுக சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
திமுக ஆட்சியின் 4 ஆண்டுக்காலத்தில் எதையும் செய்யவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக ஆட்சியில் என்ன செய்துள்ளார்கள் என்பதை குறிப்பிட்டு எதுவும் சொல்ல முடியாது. ஆனால் நான்காண்டு ஆட்சி செய்த இபிஎஸ், கிருஷ்ணகிரியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.300 கோடி மதிப்பில் தென்பெண்ணை ஆற்றின் நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் எண்ணேகொள் கால்வாய் திட்டம், அலியாளம் கால்வாய் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டங்கள் திமுக ஆட்சியில் முடங்கியுள்ளது.
இதே போல், அதிமுக ஆட்சியில் சுமார் 10 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஓசூரில் ரூ.21 கோடி மதிப்பில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்பட்டது. இதுவும் பயன்பாட்டிற்கு வராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்காக ஒரு புறம் சட்ட போராட்டம் நடத்திக் கொண்டே, மற்றொரு புறத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தார். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளியில் பயின்ற 3 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த நான்கு ஆண்டுகாலத்தில் திமுக எதையும் செய்யவில்லை. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் நடமாடிக் கொண்டிருக்கிறது. அன்றாடம் கொலை கொள்ளை நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுதான் திமுகவின் 4 ஆண்டு கால சாதனை. முன்னாள் ஆட்சியர் சகாயம், நீதிமன்றத்திற்கு செல்ல முடியாமல் அச்சப்படும் சூழ்நிலை உள்ளதாகக் கூறி பாதுகாப்பு கேட்கிறார் என்றால், இந்த ஆட்சியின் அவல நிலை எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு, இது ஒன்றே எடுத்துக்காட்டாகும்.
சாதி, மதவாத சக்திளோடு ஒரு போதும் தேர்தல் கூட்டணி கிடையாது எனக்கூறும் திருமாவளவன், திமுகவின் கொள்கையோடு முழுமையாக ஒத்துப்போகிறாரா அல்லது கூட்டணிக்காக சேர்ந்து இருக்கிறோம் என சொல்கிறாரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.