“தீவிரவாதத்துக்கு அதன் பாஷையில் பதில் கொடுக்க வேண்டும். அதற்கான மெசேஜை ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகத்துக்கு இந்தியா சொல்லியுள்ளது” என யோகி ஆதித்யநாத் கூறினார்.
உத்தரபிரதேசத்தின் லக்னோவில் பிரம்மோஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தின் தொடக்க விழாவில் காணொலி மூலம் உரையாற்றிய ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. அது இந்தியாவின் அரசியல், சமூக, உத்திசார் மன உறுதியின் அடையாளம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலுவான நடவடிக்கைதான் ஆபரேஷன் சிந்தூர். உரி சம்பவத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்கள், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகான வான்வழித் தாக்குதல்கள், பகல்காம் தாக்குதலுக்குப் பிறகான தற்போதைய தாக்குதல்கள் போன்றவை, பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்திய மண்ணில் நடத்தப்பட்டால் இந்தியா என்ன செய்யும் என்பதை உலகக்கு காட்டி இருக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசமற்ற கொள்கையைப் பின்பற்றி, இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிக்கவே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. அப்பாவி பொதுமக்கள் குறிவைக்கப்படவில்லை. ஆனால், பாகிஸ்தான் இந்தியாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து கோயில்கள், குருத்வாராக்கள், தேவாலயங்களைத் தாக்க முயன்றது. நமது ஆயுதப்படைகள் வீரத்தையும் நிதானத்தையும் வெளிப்படுத்தின.
பிரமோஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையம், இந்தியாவின் பாதுகாப்பில் தற்சார்பை நோக்கிய முயற்சிகளை வலுப்படுத்தும். குறிப்பிடத்தக்க அளவில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் இந்தப் பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இது பங்களிக்கும். தேசிய தொழில்நுட்ப தினத்தில் நடைபெற்ற இந்த திறப்பு விழா, ஒரு மைல்கல் தருணம். இது இந்தியாவின் வளர்ந்து வரும் புதுமையான ஆற்றலைப் பிரதிபலிக்கிறது.
உத்தரபிரதேச பாதுகாப்பு தொழில் வழித்தடத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயமாக இந்த மையம் விளங்கும். இது ஏற்கனவே சுமார் 500 நேரடி மற்றும் 1,000 மறைமுக வேலைகளை உருவாக்கியுள்ளது. இந்தத் தொழில் வழித்தடத்தில் இதுவரை ரூ. 34,000 கோடி முதலீட்டில் மொத்தம் 180 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதில் சுமார் ரூ. 4,000 கோடி ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
40 மாதங்களுக்குள் திட்டத்தை முடித்ததற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தொடக்க விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, பிரிஜேஷ் பதக், தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும் டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி. காமத், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், “பிரம்மோஸ் ஏவுகணை என்றால் என்ன என்பதை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அதன் கிளிம்ப்ஸை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதை பார்க்காதவர்கள் பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமை குறித்து பாகிஸ்தானியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
எந்தவொரு தீவிரவாத செயலும் தேசத்துக்கு எதிரான போராகக் கருதப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தீவிரவாதத்தை முற்றிலுமாக அழிக்கும் வரை, இந்தப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் இருக்காது. அதை நசுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்காக, முழு இந்தியாவும் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றுபட வேண்டும்.
தீவிரவாதத்துக்கு அதன் பாஷையில் பதில் கொடுக்க வேண்டும். அதற்கான மெசேஜை ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகத்துக்கு இந்தியா சொல்லியுள்ளது” என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.