என் தாய் ராசாத்தி அம்மாளின் மடிதான் எனக்கு புகலிடம்: கனிமொழி!

இந்த உலகம் அதன் வெட்கமற்ற இரட்டை நிலைப்பாட்டை காட்டும் போதெல்லாம் என் தாய் ராசாத்தி அம்மாளின் மடிதான் எனக்கு புகலிடம் என அன்னையர் தினத்தில் தனது தாயுடனான புகைப்படத்தை பகிர்ந்து திமுக எம்பி கனிமொழி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அவர் இதுவரை எதையுமே கேட்டதில்லை, ஆனால் தன்னிடம் இருந்ததையெல்லாம் எனக்கு கொடுத்திருக்கிறார். இன்றும் கூட ஒவ்வொரு இரவும் எனக்காக காத்திருக்கிறார், எப்போது வருவாய் என்ற கேள்விக்கு முன், ஏதேனும் சாப்பிட்டாயா என கேட்க மறந்ததேயில்லை. இந்த உலகம் அதன் வெட்கமற்ற இரட்டை நிலைபாட்டை காட்டும் போதெல்லம் அவர் மடிதான் எனக்கு புகலிடம்.

வலிமையும், கதகதப்பும், அன்பும், அஞ்சாமையும் ஒரு சேர அள்ளித் தருபவர் அவர். இன்றும் அவர் கற்றுத்தந்த பாடத்தையும், மனஉறுதியையும் மறக்காமல் துணைக்கு அழைத்துச் செல்கிறேன். வாழ்வும், அரசியலும் உருவாக்கிய இடைவெளியை அவரது அரவணைப்பில் நிரப்பிக் கொள்கிறேன். இந்த நாள் இப்படியாக உங்கள் வாழ்வை செதுக்கிய ஒவ்வொரு பெண்ணுக்குமானது. இனிய அன்னையர் தின வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அன்னையர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தனது ராசாத்தி அம்மாளுக்கு வாழ்த்துகளை கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.