போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு, எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறினால், தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, எல்லையில் உள்ள கமாண்டர்களுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பகல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் கடந்த 7-ம் தேதி மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது. இதில், 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மறுநாள், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் 400 ட்ரோன்களை பாகிஸ்தான் வீசியது. இந்தியா தனது அதிநவீன ஆயுதங்களான எல்-70 பீரங்கி, சில்கா பீரங்கி, எஸ்-400 (சுதர்சன சக்கரம்) உள்ளிட்டவற்றால் பாகிஸ்தானுக்கு கடுமையாக பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தான் வீசிய ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்திய படைகள் வெற்றிகரமாக நடுவானிலேயே தகர்த்து அழித்து, பாகிஸ்தானின் பதில் தாக்குதலை முறியடித்தன. பாகிஸ்தானின் 3 முக்கிய விமான தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்களை குறிவைத்து, இந்திய போர் விமானங்கள் கடந்த 10-ம் தேதி காலை தாக்குதல் நடத்தின. இதில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
இந்த சூழலில், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தீவிரம் அடைந்ததால், அமெரிக்க அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இந்தியாவும் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த சிலமணி நேரங்களில் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறியது. ஜம்மு காஷ்மீர், குஜராத், ராஜஸ்தான் மாநில எல்லையில் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய படைகள் இடைமறித்து அழித்தன. இந்திய தரப்பும் சளைக்காமல் பதிலடி கொடுத்த நிலையில், எல்லையில் குண்டு சத்தம் நேற்று முன்தினம் இரவு ஓய்ந்தது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர். இதில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால், தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படைகளுக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். தீவிரவாத ஊடுருவலை முற்றிலும் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதன்பிறகு, எல்லையில் உள்ள ராணுவ கமாண்டர்களுடன் பேசிய ராணுவ தளபதி உபேந்திர திவேதி, பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்தார். எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்கினால், பிரதமர் உத்தரவுப்படி தக்க பதிலடி கொடுக்குமாறு கமாண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.