“கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வேளையில், நாம் பக்தி, கலாசாரம் மற்றும் தலைமுறைகளை ஒன்றிணைக்கும் ஒரு புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம். இந்த கொண்டாட்டம் நமது பாரம்பரியத்தின் வலிமையையும், காலத்தால் அழியாத ஒற்றுமையில் நம்மை ஒன்றிணைக்கும் உணர்வையும் தெளிவாக பிரதிபலிக்கிறது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:-
பிரசித்தி பெற்ற வைகை கள்ளழகர் திருவிழாவையொட்டி வாழ்த்துகள். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வேளையில், நாம் பக்தி, கலாசாரம் மற்றும் தலைமுறைகளை ஒன்றிணைக்கும் ஒரு புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம்.
இந்த கொண்டாட்டம் நமது பாரம்பரியத்தின் வலிமையையும், காலத்தால் அழியாத ஒற்றுமையில் நம்மை ஒன்றிணைக்கும் உணர்வையும் தெளிவாக பிரதிபலிக்கிறது. கள்ளழகரின் அருள் நம் அனைவருக்கும் நல்லிணக்கம், வளம் மற்றும் ஆன்மிக பலத்தையும், நமது தேசத்துக்கு அதிக மகிமையையும் கொண்டு வரட்டும். இவ்வாறு ஆளுநர் கூறியுள்ளார்.
முன்னதாக, கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளான இன்று சித்ரா பவுர்ணமியன்று அதிகாலை 5.59 மணியளவில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என விண்ணதிர கோஷம் எழுப்பினர்.