இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த மோதல் முடிவுக்கு வந்திருந்தது. இதைப் பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருந்தனர். ஆனால், மோதல் முடிவுக்கு வந்ததை அறிவித்த வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மீது வலதுசாரி நெட்டிசன்கள் சிலர் கடுமையான விமர்சனங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பகல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதன் பிறகு பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தவே கடந்த சில நாட்களாகவே இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்ந்து வந்தது. இந்தியா திருப்பி அடிக்க தொடங்கியதும் அதைச் சமாளிக்க முடியாத பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இருப்பினும், அப்பாவி மக்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் இந்தியாவும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டது. இது குறித்து மத்திய அரசு சார்பில் முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டார். இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்ததைப் பலரும் வரவேற்றனர். இருப்பினும், போர் என்றால் என்னவென்றே தெரியாது.. போர் எந்தளவுக்குக் கொடூரப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத நெட்டிசன்கள் சிலர் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை விமர்சித்தனர். போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டதற்காகச் சமூக வலைத்தளங்களில் விக்ரம் மிஸ்ரியை அவர்கள் கடுமையாகச் சாடினர். இருப்பினும், பல்வேறு சிவில் சர்வீஸ் சங்கங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் விக்ரம் மிஸ்ரிக்கு ஆதரவாக இருப்பதாக அறிவித்தார்.
விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் பக்க பலமாக இருப்போம் என்று கூறிய ஐஏஎஸ் சங்கம், அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை நேர்மையுடன் செய்ததற்காக விமர்சிக்கப்படக்கூடாது என்று தெரிவித்தனர். இது தொடர்பாக ஐஏஎஸ் சங்கம் தனது ட்விட்டரில், “ஐஏஎஸ் சங்கம் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பக்க பலமாக நிற்கிறது. நேர்மையுடன் தங்கள் கடமைகளைச் செய்யும் அரசு ஊழியர்கள் மீது இதுபோல முன்வைக்கப்பட்ட தேவையற்ற தனிப்பட்ட தாக்குதல்கள் மிகவும் வருந்தத்தக்கவை” என்று பதிவிட்டுள்ளனர்.
அதேபோல ஐஆர்டிஎஸ் சங்கம் மற்றும் ஐஆர்எஸ் (சி&ஐடி) சங்கமும் இதேபோல் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வைக்கப்பட்ட மோசமான விமர்சனங்களைக் கடுமையாகக் கண்டித்தது. பொதுத் தளங்களில் மரியாதை மற்றும் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினர். ஐஆர்டிஎஸ் சங்கம் இது தொடர்பாகத் தனது ட்விட்டரில், “வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரது சேவை மற்றும் தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரித்து, அனைவரும் மரியாதை மற்றும் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல IRS (C&IT) சங்கமும் விக்ரம் மிஸ்ரி மீதான விமர்சனங்களை வன்மையாகக் கண்டித்துள்ளது.
சிவில் சர்வீஸ் சங்கங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் விக்ரம் மிஸ்ரிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதல்கள் அர்ப்பணிப்புள்ள அதிகாரிகளின் மன உறுதியைப் பாதிக்கும் என்று விமர்சித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்த விஷயத்தில் பாஜக அரசு மவுனம் காப்பதை ஏற்க முடியாது எனச் சாடினார். அவர் தனது ட்விட்டரில் மேலும், “முடிவுகளை எடுப்பது அரசின் பொறுப்பு – தனிப்பட்ட அதிகாரிகளின் வேலை இல்லை.. இதைப் புரிந்து கொள்ளாத சில சமூக விரோதக் கும்பல் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மிக மோசமான விமர்சனங்களை முன்வைக்கிறது. ஆனால் பாஜக அரசு அல்லது அதன் அமைச்சர்கள் மிஸ்ரியை பாதுகாக்க முன்வரவில்லை. மோசமாக விமர்சிப்பவர்களைக் கண்டிக்கவும் இல்லை” என்று விமர்சித்தார். முன்னாள் வெளியுறவு செயலாளர் நிருபமா மேனன், மஜ்லீஸ் கட்சியின் தலைவர் ஓவைசி ஆகியோரும் விக்ரம் மிஸ்ரி மீதான விமர்சனங்களைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.