பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2019 பிப்ரவரி மாதம் நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்தாக்குதல், கும்பல் வன்முறை, தொடர் துன்புறுத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த கொடூரம் வெளியானது. மிருகங்களும் வெட்கப்படும் குற்றச் செயல் குறித்து துணிச்சலாக காவல் துறைக்கு 2019 பிப்ரவரி 19-ம் தேதி கொடுத்த புகாரில் இருந்து சட்ட நடவடிக்கை தொடங்கியது. இடையில் குற்றப்பிரிவு புலானாய்வுத் துறைக்கு வழக்கு மாற்றப்பட்டு, பின்னர் மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டது.
மத்திய புலனாய்வு துறை விசாரணை அதிகாரியின் விசாரணையும், சாட்சியங்களையும், ஆவணங்களையும் நீதிமன்ற விசாரணையில் நிலைநாட்டி, குற்றத்தை உறுதி செய்த முறை பாராட்டத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை, குற்றவாளிகளின் மனிதத் தன்மையற்ற ஈனச் செயலை நீதிமன்றத்தில் நிலைநாட்டியதை போற்றிப் பாராட்டுகிறோம்.
குற்றவாளிகள் மீது முன்வைக்கப்பட்ட 76 குற்றச்சாட்டுகளில் 66 குற்றங்களை உறுதி செய்து, நிலைநாட்டிய விசாரணை அதிகாரிகள், சாட்சியளித்தவர்கள், இவைகளை தக்க முறையில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, குற்றங்களை நிரூபித்த மத்திய புலனாய்வு துறை வழக்கறிஞர் ஆகியோருக்கு நன்றி பாராட்டி வாழ்த்துகிறோம்.
பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் கோவை மகளிர் நீதிமன்றம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ 85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியிருப்பது, போராடும் பெண்களுக்கு வாளும், கேடயமுமாக உதவி சிறப்புப் பெறும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.