குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தலைமைத் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர்.

முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான், ராணுவப் படைத் தலைவர் உபேந்திர திவேதி, விமானப் படைத் தலைவர் ஏ.பி. சிங், கடற்படைத் தலைவர் தினேஷ் கே. திரிபாதி ஆகியோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் பற்றியும் இந்தியா – பாகிஸ்தான் தற்போதைய நிலை பற்றியும் விளக்கமளித்தனர். அப்போது பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்த இந்திய பாதுகாப்புப் படைகளின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் குடியரசுத்தலைவர் பாராட்டியதாக குடியரசுத்தலைவர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப். 22 பகல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை கடந்த மே 7 அன்று இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், விமான தளங்களை இந்தியா தாக்கி அழித்தது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.

இதனிடையே, இரு நாடுகளிடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் முன்வந்தது. அதன்படி போர் நிறுத்தப்படுவதாக சனிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மோடியும் மக்களிடம் உரையாற்றினார். எல்லையில் அமைதியான சூழ்நிலை திரும்பி வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் எல்லையில் கண்காணிப்புப் பணி தொடர்ந்து வருகிறது.