இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பங்கு எதுவும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு முன் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று மாலை ஆஜராகி ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் வழக்கமான ஆயுதங்களை கொண்ட மோதலாகவே இருந்தது. பாகிஸ்தானிடம் இருந்து அணுசக்தி சமிக்ஞை எதுவும் இல்லை. பாகிஸ்தானில் உள்ள விமானப் படை தளங்களை நாம் தாக்கி சேதப்படுத்தி விட்டதால் எச்கியூ-9 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உட்பட சீனாவின் ஆயுதங்களை பாகிஸ்தானால் பயன்படுத்த முடியவில்லை.
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சண்டை நிறுத்த உட்ன்பாட்டில் அமெரிக்கவின் பங்கோ அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்பின் பங்கோ எதுவும் இல்லை. லாகூரில் உள்ள எச்கியூ-9 வான் பாதுகாப்பு சாதனங்கள், முக்கியத்துவம் வாய்ந்த நூர் கான் விமானப் படை தளம் உட்பட பாகிஸ்தானின் ராணுவ தளங்களை இந்திய ராணுவம் தாக்கி சேதப்படுத்தியது. இதையடுத்து மே 10-ம் தேதி பிற்பகல் டெல்லியில் உள்ள இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநரை பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் தொடர்பு கொண்டு சண்டை நிறுத்த கோரிக்கையை முன்வைத்தார். எனவே இதில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் எதுவும் இல்லை.
இந்தியாவின் 5 ஜெட் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக வந்த தகவல்கள் குறித்து கேட்கிறீர்கள். தேசப் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக இது தொடர்பாக கருத்து தெரிவிக்க இயலாது. இவ்வாறு விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட உதவியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிவரும் நிலையில் அதனை விக்ரம் மிஸ்ரி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.