இலங்கை அதிபரானார் ரணி்ல் விக்ரமசிங்கே: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யப்பா அறிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையில அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக சில தினங்களுக்கு முன் அதிபர் மாளிகையை லட்சகணக்கான பொதுமக்கள் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டனர். இதனால் வேறு வழியின்றி, தப்பித்தோம்; பிழைத்தோம் என உயிருக்கு அஞ்சி கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி ஓட வேண்டியதானது. அவர் மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அவர் தமது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன், நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமிப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி ரணில் இலங்கையின் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யப்பா அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதசாவை, அடுத்த அதிபராக எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தி இருந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததையடுத்து, தமது பிரதமர் பதவியை ரணில் ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது அவர் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளது போராட்டக்காரர்களை கொதிப்படைய வைத்துள்ளதாகவும், இதனால் இலங்கையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் மக்கள் போராட்டம் மீண்டும் வெடித்துள்ள நிலையில், அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவரை கைது செய்யாமல் நாட்டை விட்டு தப்பியோட விட்டு விட்டதாக குற்றம் சாட்டி இலங்கையில் போராட்டம் வெடித்துள்ளது. கண்ணீர் புகைக்குண்டு உள்ளிட்டவைகளை வீசி போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக, இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசு தொலைக்காட்சியை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதை அடுத்து ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. கோத்தபய தப்பிச் செல்ல உதவியதாக பிரதமர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே இலங்கை அரசு தொலைக்காட்சியான ஜாதிகா ரூபாவஹினி அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.