பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் 78-வது கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் உலகின் முதல் தொற்றுநோய் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொற்றுநோய்க்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், எதிர்கால தொற்றுநோய்களுக்கு வலுவான மற்றும் சமமான எதிர்வினையை உறுதி செய்யவும் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோய் ஒப்பந்தம் ஏற்கப்பட்ட நிகழ்வில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு பாராட்டுகள். உலக சுகாதார அமைப்புக்கு இந்தியாவின் ஆதரவும், உறுதிபாட்டுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என குறிப்பிட்டு இருந்தார்.