டாஸ்மாக் மேலாளர்களிடம் 8-வது முறையாக அமலாக்கத்துறை விசாரணை!

டாஸ்மாக்கில் நடைபெற்ற ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாளர்கள் 2 பேர் 8-வது முறையாக மீண்டும் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ரூ.1000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த 16-ம் தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, தொழிலதிபர் ரத்தீஷ் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2 நாட்களாக நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சோதனை நடைபெற்ற 2 நாட்களும் டாஸ்மாம் நிர்வாக இயக்குநர் விசாகனை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், தொழிலதிபர் தேவக்குமார், மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் ஆகியோரையும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சோதனைக்குள்ளானவர்கள் பலரையும் விசாரணைக்கு ஆஜராகி கூறி சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் டாஸ்மாக் பொது மேலாளர் (மொத்த விற்பனை மற்றும் நிர்வாகம்) சங்கீதா மற்றும் துணை பொது மேளாளர்(விற்பனை மற்றும் கொள்முதல்) ஜோதி சங்கர் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக 7 முறை சங்கீதா மற்றும் ஜோதி சங்கர் ஆகிய இருவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பல்வேறு ஆதாரங்களை திரட்டினர்.

இந்நிலையில் 8 வது முறையாக ஜோதி சங்கர் மற்றும் சங்கீதா ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறையில் இருந்து மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நேற்று காலை 11 மணிக்கு ஜோதி சங்கர், சங்கீதா ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

6 மணி நேர விசாரணைக்கு பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அப்போது, தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஜோதி சங்கர் தொடக்கத்தில் இருந்து டாஸ்மாக் நிர்வாகத்திலேயே பணிப்புரிந்து வருகிறார். சங்கீதா இதற்கு முன்பாக ஆவினில் பணியாற்றி உள்ளார். இன்னும் சிறிது காலத்தில் அவர் ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு பெற இருந்ததாக கூறப்படுகிறது. இந்தசூழல்நிலையில் தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று, அவரிடம் 8-வது முறையாக விசாரணை நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.