உச்ச நீதிமன்றம் விதித்திருப்பது இடைக்கால தடைதான்: தமிழிசை சவுந்தரராஜன்!

‘டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் விதித்திருப்பது இடைக்கால தடைதான். எனவே, அமலாக்கத் துறை விசாரணை இதற்கு மேலும் நடைபெறும்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன கருத்து சொன்னாலும் அதை மதிக்கிறோம். ஆனால் இதை சிலர் அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். அமலாக்கத் துறையை மத்திய அரசு இயக்குகிறது என்று சொல்வதே தவறு. அது தனிப்பட்ட அமைப்பு. பாஜக ஆளுகின்ற அஸ்ஸாம், இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற இடங்களில்கூட அமலாக்கத் துறை சோதனைகள் நடந்திருக்கின்றன

டாஸ்மாக்கை பொருத்தமட்டில் இந்த வழக்கின் அடிப்படையே தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 எஃப்ஐஆர்-கள்தான். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சொன்னபோது உயர் நீதிமன்றம் தமிழக அரசை கண்டித்து விசாரணை தொடரலாம் என்று சொன்னதன் பேரிலேயே விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது

டாஸ்மாக்கில் நடைபெற்ற தவறான பண பரிவர்த்தனையைத் தான் அமலாக்கத் துறை விசாரணை செய்து வந்தது. எனவே ஊழல் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. இப்போது வந்திருப்பது இடைக்கால தடைதான். எனவே இதற்கு மேலும் விசாரணை நடைபெறும்.

தமிழக மக்களின் வரிப்பணத்தை யார் சுருட்டினாலும் மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏற்கெனவே, ‘திமுகவினர் விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்பவர்கள்’ என்று சர்க்காரியா கமிஷன் சான்றிதழ் அளித்துள்ளது என்பதையும் நாம் இங்கே நினைவுகூர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.